Udhayanidhi Stalin Angry | பதவி கேட்ட நிர்வாகிகள்.. டோஸ் விட்ட உதயநிதி! பரபரக்கும் அன்பகம்!
பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு திமுக தயாராகி வருவதாகவும், அதற்கான வேலைகளை உதயநிதி மேற்கொண்டு வருவதாகவும், தேர்தல் முடிவு வந்தபின் அறிவாலயத்தில் இருந்து ஆர்டர்கள் பறக்கும் என்று வெளிவரும் தகவல்கள் திமுக சீனியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக வில் அமைப்பு ரீதியிலான மாற்றங்களை கொண்டு வருவது குறித்து உதயநிதி முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை மேற்கொண்டு உள்ளதாகவும், தேர்தல் முடிவுகள் வந்த பின் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தை அன்பகத்தில் தனியாக மேற்கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். திமுக இளைஞர் அலிகள் அமைப்பு ரீதியாக மாவட்டம் மாநகரம் மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர் என பலர் நியமிக்கப்பட்டார்கள், அவர்கள் அனைவரின் செயல்பாடுமே வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஒட்டி எடை போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தனித்தனியே இளைஞர் அணி பொறுப்பாளர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
அதில் அவர் கொடுத்துள்ள ஒரு ஹிண்ட் இளைஞர் அணி நிர்வாகிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக இளைஞர் அணியில் உள்ள பலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம், மாவட்ட செயலாளர் பொறுப்புகள் கூட காத்திருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வந்து நிலையில், இளைஞர் அணியிலும் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் மெசேஜ் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் திமுக சீனியர் மாவட்ட செயலாளர்கள் குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன, அந்த லிஸ்ட் உடன் சென்னை திரும்பிய உதயநிதி திமுகவின் அடிப்படை கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்யப் போகிறார் என்ற செய்திகள் வெளி வந்தன.
அவை தான் திமுகவின் அழைப்பு ரீதியாக தொகுதிகளை மறுசீரமைப்பது, சில இளைஞர் அணியை சேர்ந்த புதிய முகங்களுக்கு மாவட்ட செயலாளராக வாய்ப்பு கொடுப்பது, மேலும் தற்போது ஐந்து முதல் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற நிலை உள்ளதை மாற்றி, இரண்டு முதல் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்னும் அளவில் பொறுப்புகளை வழங்கி திமுகவை அனைத்து தொகுதிகளிலும் பலப்படுத்துவது ஆகியவை அடங்கும்.
இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றது முதல் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் அனைவருமே கட்சிக்குள் முக்கியமானவர்களாக வலம் வர தொடங்கினார்கள். தற்போது அந்த இளைஞர் அணிகளும் மாற்றம் இருக்கும் என்ற செய்தி வெளியாகி உள்ளது அவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கி வைத்த கட்டமைப்பில் சில அடிப்படை மாற்றங்களை மட்டுமே இதுவரை செய்துள்ளார் ஸ்டாலின். சில பெரிய மாற்றங்களை ஸ்டாலின் செய்ய நினைத்தபோது, திமுக சீனியர்கள் முட்டுக்கட்டை போட்டு அதை செய்ய விடாமல் தடுத்தனர். இந்நிலையில் ஒருவேளை அமைப்பு ரீதியான மாற்றங்களை உதயநிதி ஸ்டாலின் கையில் எடுத்தால் நிச்சயம் அது சலசலப்பை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் உதயநிதி என்பதே தற்போதைய கேள்வி.