Priyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்
வயநாடு இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வாக்கு சதவீதம் பின்னடைவை சந்தித்திருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் வெற்றி பிரியங்கா காந்தி பக்கம் இருந்தாலும், ராகுல் காந்தியின் சாதனையை அவர் முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி, கேரளாவில் வயநாட்டில் தட்டித்தூக்கிய ராகுல்காந்தி, ஒரு தொகுதி எம்.பியாக மட்டுமே இருக்க முடியும் என்பதால் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் வயநாடு 2 முறை தன்னை ஜெயிக்க வைத்த தொகுதி என்பதால், அங்கு தனது தங்கை பிரியங்கா காந்தியை களமிறக்கினார். வயநாடு தான் பிரியங்கா காந்திக்கு தேர்தல் அரசியல் பிரவேசம் என்பதால் இந்த தேர்தல் காங்கிரஸுக்கு முக்கியமானதாக மாறியது. அவருக்கு எதிராக கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மொகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் களமிறங்கினர்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் களம் பிரியங்கா காந்திக்கு சாதகமகாவே இருந்தது. ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் சேர்ந்து சூறாவளி பிரச்சாரம் செய்தனர். அதனால் எதிர் தரப்பினரும் பிரச்சாரம் பெரிய அளவுக்கு கைகொடுக்கவில்லை. பிரியங்காவுக்கு அரசியல் அனுபவமே இல்லை என்பதே அவர்களது பிரச்சாரத்தில் அதிகம் இடம்பெற்ற வார்த்தை. என்ன இருந்தாலும் வெற்றி பிரியங்காவுக்கு தான் என முடிவு எடுத்து கொண்டு எதிர் தரப்பினரும் தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டியதாகவே சொல்கின்றனர்.
வயநாடு இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக 64.71 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ராகுல்காந்தி 2019ல் முதல்முறையாக வயநாட்டில் களமிறங்கும் போது 80.37 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அப்போது 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளை மிரளவைத்தார். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் 73.57 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் 3 லட்சத்துக்கு 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கினார் ராகுல்.
இந்த முறை குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதால், ”5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி” என்ற காங்கிரஸின் டார்கெட் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுல்காந்தியின் வயநாடு சாதனையை பிரியங்கா காந்தி முறியடிப்பாரா என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
வயநாட்டில் வாக்கு சதவீதம் குறைந்ததில் நிலச்சரிவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டது முக்கிய காரணம் என சொல்கின்றனர். அதேபோல் பிரியங்கா தான் வெற்றி பெறப் போகிறார் என ஆரம்பமே முடிவு செய்து கொண்டதால் வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.