Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்
அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்துவிட்டு கிளம்பும்போது, சுற்றி இருந்தவர்கள் வணக்கம் வைத்த போது, செஞ்சி மஸ்தான் மட்டும் எதையும் கண்டுகொள்ளாமல் பிஸ்கட் சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனவே பொன்முடி, செஞ்சி மஸ்தான் இடையே மோதல் இருந்து வருவதாக பேசப்படும் நிலையில், வெளிப்படையாகவே நிறைய இடங்களில் அதனை காட்டி வருவது திமுகவினருக்குள் சலசலப்பை கொடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை யார் கண்ட்ரோலில் எடுப்பது என்பதில் நீண்ட காலமாகவே பொன்முடிக்கும் செஞ்சி மஸ்தானுக்கும் இடையே மோதல் முற்றி வந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார் மஸ்தான். கள்ளச்சாராயம் புகார், விழுப்புரத்தில் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினரின் ஆதிக்கம், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் உதவி செய்வது, டெண்டர் ஒதுக்குவதில் பாரபட்சம் என செஞ்சி மஸ்தான் மீதான புகார்கள் தலைமை வரை சென்றன. இதனால் முதலில் மகன் மற்றும் மருமகனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. பொன்முடியும் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக காய்களை நகர்த்த, விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியையும் இழந்தார்.
இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலேயே வெளிப்படையாக மோதலை காட்டத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் இருப்பது, செஞ்சி மஸ்தான் பேசிக் கொண்டிருக்கும் போதே பொன்முடி மைக்கை பிடுங்கியது என விழுப்புரம் திமுகவில் 2 தரப்பாக பிரிந்து மோதிக் கொண்டனர்.
இறுதியில் கடந்த அமைச்சரவை மாற்றத்தில் சிறுபான்மை துறை அமைச்சர் பதவியையும் இழந்தார் செஞ்சி மஸ்தான். இப்படி அனைத்து பதவிகளையும் இழந்ததற்கு பொன்முடி தான் காரணம் என்று செஞ்சி மஸ்தான் கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் பொன்முடி வந்திருந்தார். புயல் பேரிடர் பாதுகாப்பு மையத்தில் இருந்து அவர் கிளம்பும் போது சுற்றி இருந்தவர்கள் வணக்க வைத்தனர். ஆனால் செஞ்சி மஸ்தான் எதையும் கண்டுகொள்ளாமல் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.





















