Mamata Banerjee Resign | ’’ராஜினாமா செய்ய தயார்!’’மம்தா அதிரடி அறிவிப்பு..பரபரக்கும் மேற்கு வங்கம்
‘’மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்’’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த, 31 வயதான பயிற்சி பெண் டாக்டரை, கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவது அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் வழங்க வேண்டி அங்கு தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு மருத்துவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இந்த விவகாரத்தில் உரிய நீதியும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யாமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், போராட்டம் நடத்தும் பயிற்சி மருத்துவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது. அதற்கு அவர்கள் தரப்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகவும், அதை அரசு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், தலைமைச் செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை.
சுமார் 2 மணி நேரமாக மருத்துவர்களுக்காக காத்திருந்த முதல்வர் மம்தா பின்னர் பொறுமையிழந்து அங்கிருந்து புறப்பட்டார்.இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி. மருத்துவ சகோதர, சகோதரிகளை சந்திக்க நேற்று மாலை 2 மணி நேரமாக. நான், தலைமைச் செயலர், டிஜிபி, உள்துறை செயலர் அனைவரும் காத்திருந்தோம். ஆனால், பயன் இல்லை. மருத்துவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களை மன்னிக்கிறோம். 2 மணி நேரமாக காக்க வைத்து, பேச்சுவார்த்தைக்கு வராததற்காக அவர்கள் மீது எந்த நடவடிக்கையு, எடுக்கப்போவது இல்லை.
எங்கள் அரசு அவமானப்படுத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் அரசியல் சாயம் இருப்பது சாதாரண மக்களுக்கு தெரியாது. இங்குள்ள எதிர்க்கட்சியினருக்கு நீதி தேவை இல்லை. பதவிதான் வேண்டும். மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். பதவி பற்றி எனக்கு கவலை இல்லை. நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் கவலைப்படுகிறேன். மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக, மேற்கு வங்க மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.