Haryana election result | மண்ணைக் கவ்விய காங்கிரஸ்!காலரை தூக்கும் பாஜக!ஷாக்கில் ராகுல்
ஹரியானாவில் வெற்றி உறுதி என நம்பிக்கையுடன் இருந்த காங்கிரஸுக்கு வாக்கு எண்ணிக்கை நிலவரம் பேரிடியாக அமைந்துள்ளது.
90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என தீவிரம் காட்டியது பாஜக. அதே நேரத்தில் இந்த முறை ஹரியானாவை தங்கள் வசம் ஆக்க வேண்டும் என ஆர்வம் காட்டியது காங்கிரஸ். ஹரியானா தேர்தல் களமும் ஆரம்பம் முதலே காங்கிரஸுக்கு சாதகமாகவே அமைந்தது. மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்த போது அதனை எதிர்த்து போராடியவர்களில் ஹரியானா விவசாயிகளின் பங்கு அதிகம். அதனால் விவசாயிகளின் அதிருப்தி மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஹரியானா தேர்தலில் பாஜகவுக்கு சறுக்கலாக உள்ளதாக பேசப்பட்டது. காங்கிரஸ் எம்.பியின் தேர்தல் பிரச்சாரமும் விவசாயிகளை சுற்றியே அமைந்தது காங்கிரஸுக்கு ப்ளஸாக அமைந்தது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் காங்கிரஸுக்கு சாதகமாகவே அமைந்தன. இந்தநிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிககி நடந்து வரும் நிலையில், முன்னிலை நிலவரம் மாறி மாறி வந்து 2 கட்சிகளுக்கு பதற்றத்தை கொடுத்தது. காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வந்த நேரத்தில், அடுத்த சில மணி நேரங்களிலேயே நிலவரம் மாறி பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 49 தொகுதிகளில் பாஜகவும், 35 தொகுதிகளில் காங்கிரஸும், மற்ற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
மல்யுத்த வீராங்கனை காங்கிரஸ் சார்பில் களமிறங்கியது அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் முன்னிலை வகித்து அசத்தி வருகிறார். இருந்தாலும் விவசாயிகள் போராட்டமும், மல்யுத்த வீரர்கள் போராட்டமும் காங்கிரஸுக்கு சாதகமாக அமையவில்லை என சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள். கள நிலவரத்திற்கு மாறாக காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரிசல்ட் இருப்பதாக அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.