Emmanuel Macron : ”ஜனநாயகத்தின் வீரியம்” பிரான்ஸ் அதிபர் தமிழில் பதிவு
இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுரா குமார திசாநாயக்கவுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன கட்சி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கையின் 9ஆவது அதிபராக அனுரா குமார திசாநாயக்க பொறுப்பேற்றுள்ளார். அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார். மேலும் பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை ஒரு நபரின் தனிப்பட்ட உழைப்பால் நடக்கவில்லை. ஆனால் நூறாயிரக்கணக்கானவரின் கூட்டு முயற்சி" என்றார்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள சூழலில் அவரின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் வெளியுறவுக் கொள்கைகளிலும் அவர் எப்படி செயல்படப் போகிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது. சிங்களவர்கள், தமிழர்கள் ஒற்றுமை தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது கவனம் பெற்றது. ஒன்றிணைந்து இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம். இந்த கனவை புதிய தொடக்கத்தில் மட்டுமே நனவாக்க முடியும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும் என்று கூறியிருந்தார்.
அவருக்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுவும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், அன்புள்ள இலங்கை நண்பர்களே, உங்கள் ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தல், இலங்கையின் ஜனநாயகத்தின் வீரியத்தை பறைசாற்றுகின்றது. அனுரா திசாநாயக்க, உங்கள் வெற்றிக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு பிரான்ஸ் தயாராக உள்ளது. நம்பிக்கையும், ஒத்துழைப்பும் நம் கூட்டுமுயற்சிகளுக்கு அடிக்கல்லாக அமையட்டும்.” என்று அவரது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.





















