DMK Meeting | திமுகவில் புதிய பதவி! உதயநிதி மாஸ்டர் ப்ளான்! Ok சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதன்மூலம் திமுகவில் என்ன மாற்றங்கள் நடைபெறும் என்று அரசியல் களம் பரபரத்துக் கிடக்கிறது.
மாநிலத்தின் ஆளும் கட்சியான திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.இதில் 2 முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.
உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி,மாவட்டங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கம்...இதில் உதயநிதிக்குத் துணை முதல்வர் என்னும் கோரிக்கை, ’புலி வருது, புலி வருது’ என்னும் கதையாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அண்மையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்கும்போது, கோரிக்கை வலுத்திருக்கிறது; பழுக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். எனினும் முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், நாளை முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல தமிழ்நாட்டில் திமுகவுக்கு அமைப்பு ரீதியாக, 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் கட்சியில் மூத்தவர்களுக்கு, 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் வரை உள்ளன. இந்த எண்ணிக்கையைக் குறைத்து மாவட்டங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யோசனையை முன்வைத்துள்ளார்.
இதன்படி, 110-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை உருவாக்கி, புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கக் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்குத் தீவிரமாகத் தயாராகும் வகையில் திமுக களமாட உள்ளது.