Annamalai Apology to Nirmala Sitharaman on annapoorna srinivasan issue : பணிந்தது பாஜக!மன்னிப்பு கேட்ட அ.மலை!நிர்மலாவுக்கு பின்னடைவு
அன்னபூர்னா ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசிய வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய அன்னபூர்னா ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ஜிஎஸ்டி தொடர்பாக விமர்சித்தார். பன்னுக்கு வரி இல்லை, ஆனால் அதற்குள் வைக்கும் கிரீமுக்கு வரி இருப்பதாகவும், ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, பாஜகவை எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.
இந்தநிலையில் நிர்மலா சீதாராமனை ஸ்ரீனிவாசன் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நிதியமைச்சரிடம் விளக்கம் கொடுத்தார். வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். மற்றொரு பக்கம், தனிப்பட்ட முறையில் நடந்த இந்த சந்திப்பை வீடியோவாக வெளியிட்டது தவறு என்று எதிர்ப்பு குரலும் எழுந்தது.
பாஜகவினரை நோக்கி எதிர்க்கட்சிகள் கேள்விகளை அடுக்கிய நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘நிதியமைச்சருக்கும், ஓட்டல் உரிமையாளருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நடந்த பேச்சுவார்த்தையை பாஜகவினர் வெளியிட்டதற்கு தமிழக பாஜக சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசனை தொடர்பு கொண்டு, தனியுரிமை மீறலுக்காக எனது வருத்தத்தை தெரிவித்தேன். தமிழக வணிக சமூகத்தின் தூணாக விளங்குபவர் அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.