Pawan Kalyan | "நான் அப்படி சொல்லல"ஜெகனுக்கு திடீர் SUPPORT TWIST அடிக்கும் பவன்
திருப்பதி லட்டு விவகாரத்தை ஜெகன் மோகன் ரெட்டியை நோக்கி சந்திரபாபு திரும்பிய நிலையில், அவருடன் கூட்டணியில் இருக்கக் கூடிய பவன் கல்யாண், லட்டு விவகாரத்தில் ஜெகன் மோகனுக்கு ஆதரவாக பேசி ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறி, தற்போது அதனை சரிசெய்துவிட்டதாக குறிப்பிட்டார். இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெளியான ஆய்வில் லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன், "இவை சந்திரபாபு நாயுடுவின் திசை திருப்பும் உத்திகள். யாராவது இப்படிச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? தெலுங்கு தேசம் மத விஷயங்களில் அரசியல் செய்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்தார். லட்டு விவகாரம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் துணை முதல்வரும், தெலுங்கு தேசத்துடன் கூட்டணியில் இருக்கும் ஜனசேனா கட்சித் தலைவரான பவன் கல்யாண் ஜெகன் மோகன் இதற்கு பொறுப்பு இல்லை என சொல்லி ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய அவர், ‘நாங்கள் ஜெகன் மோகனை குறை சொல்லவில்லை. இதற்கு திருப்பதி தேவஸ்தானம் தான் பொறுப்பு. ஜெகன் மோகன் ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்ட தேவஸ்தான குழுவை தான் நாங்கள் குறை சொல்கிறோம். ஆனால் அவர்களை நீங்கள் ஏன் காப்பாற்ற நினைக்கிறீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி. விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்” என கூறியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினரும், தொண்டர்களும் விமர்சனங்களை அடுக்கி வரும் நிலையில், ஜெகன் மோகனை நேரடியாக இதில் சம்பந்தப்படுத்த முடியாது என பவன் கல்யாண் சொல்லியுள்ளது கவனம் பெற்றுள்ளது.