Amit Shah vs VK Pandian : ”ஒடிசாவை தமிழன் ஆள்வதா?” பற்றவைக்கும் அமித்ஷா! டார்கெட் VK பாண்டியன்!
ஒடிசாவில் தமிழர் முதல்வராவதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று மீண்டும் விகே பாண்டியனை டார்கெட் செய்துள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா.. இதன் மூலம் தமிழன் vs ஒடிசா மக்கள் என்ற வேற்றுமை உணர்வை தூண்டும் ஸ்ட்ராட்டஜியை ஒடிசாவில் தீவிரமாக பாஜக முன்னெடுப்பதை காண முடிகிறது.
ஐநாவில் தமிழ் மொழியில் பேசுவது, மேடைகளில் திருக்குறளை வாசிப்பது, தமிழ் போன்ற மிகப் பழமையான ஒரு மொழி இருக்கிறதா என்று சிலாகிப்பது.. இது அனைத்தையுமே அண்மைக்காலமாக மோடி செய்து வருகிறார். இப்படி இருக்கையில் ஒரு தமிழன் வேறொரு மாநிலத்தை ஆளக்கூடாதா, அதில் மட்டும் பாஜகவுக்கு என்ன பிரச்சனை வந்து விடுகிறது என்பதுதான் பலர் மத்தியில் எழும் கேள்வி.
கடந்த 20 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக உள்ள நவீன் பட்நாயக்கை அரசியல் ரீதியாக வீழ்த்த முடியாது என்பது பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். அதே நேரம் வயது முதிர்வு காரணமாக தனக்குப்பின் ஒடிசா மற்றும் பிஜு ஜனதாக்கள் கட்சியில் எதிர்காலம் விகே பாண்டியன் தான் என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டார் நவீன் பட்நாயக். இந்நிலையில் ஒடிசா மக்கள் மத்தியில் விகே பாண்டியனுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. அதனால் நவீன் பட்நாயக்கு பிறகும் இங்கே அவ்வளவு எளிதில் ஆட்சியைப் பிடித்து விட முடியாது என்பதை பாஜக உணர்ந்துள்ளது. அதன் காரணமாகவே வழக்கமான தங்களுடைய பிரிவினையை உருவாக்கும் ஸ்ட்ராட்டஜியை இங்கே ஒடிசாவில் கலமரக்கி உள்ளது பாஜக.
அதன் காரணமாகவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் பூரி ஜெகன்னாத் கோயிலுக்கு சென்று விட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ஆறு வருடங்களுக்கு முன் காணாமல் போன பூரி ஜெகநாத் கோயிலில் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு சென்று விட்டதாக விகே பாண்டியனை தாக்கி குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அதே நேரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ,
தமிழரை முதல்வராக நவீன் பட்நாயக் முயற்சிப்பதாகவும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒடிசாவை சேர்ந்த நபரையே முதல்வராக்குவோம் என அமித் ஷா கூறி இருந்தார்.
இந்நிலையில் தமிழர் vs ஒடிசா மக்கள் என்று வேற்றுமையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
ஆனால் தங்களுடைய அஜெண்டாவிலிருந்து பின்வாங்காத அமித்ஷா மீண்டும் அதே போன்ற ஒரு கருத்தை சொல்லியுள்ளார்.
ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள சந்த் பாலியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் உரையாற்றிய அமித் ஷா, ஒடிசா மக்கள் தங்கள் சாம்ராட் அசோகருக்கு எதிராக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து வீரத்துடன் போராடினார்கள். இன்று அதே ஒடிசா மக்கள் மீது தமிழ் முதல்வரை நவீன் பட்நாயக் திணிக்க முயல்கிறார். நவீன் பட்நாயக்கை ஒடிசா மக்கள் சகித்துக் கொண்டார்கள் ஆனால் அவரின் பெயரில் ஒரு தமிழரை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். ஒடிசாவின் பெருமைக்கான தேர்தல் இது. ஒரு தமிழர் திரை மறைவில் இருந்து அரசை வழிநடத்த நீங்கள் அனுமதிக்க போகிறீர்களா. பூரி ஜெகநாத் கோயிலின் கருவூலறைக்கு போலீசாவின் தயாரிக்கப்பட்டிருக்கிறது. எதற்காக போலி சாவி? விசாரணை அறிக்கையை ஏன் பகிரங்கமாக வெளியிடவில்லை என்று நவீன் பட்நாயக் பதில் அளிக்க வேண்டும். என்று அமித்ஷா பேசி உள்ளது மீண்டும் சர்ச்சையை கூட்டி உள்ளது.