Madurai Child Death : ’’என் பிள்ளை போச்சு பள்ளி நிர்வாகம் தான் காரணம்’’கதறும் சிறுமியின் தந்தை
மதுரையில் மழலையர் பள்ளியில் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக பள்ளிக்கு சீல் பள்ளி தாளாளர் உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை கே.கே நகர் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் ஸ்ரீ கின்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளிகளை கே.கே நகர் மற்றும் சின்ன சொக்கிகுளம் பகுதிகளில் நடத்திவருகிறார். பள்ளி தொடர்பாகவும் குழந்தைகள் பராமரிப்பு தொடர்பாகவும் திவ்யா instagram பக்கத்தில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானவர். அதனால் இவரது மழலையர் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர் ஆர்வம் காட்டினர்.
விடுமுறையையொட்டி, மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கின்டர் கார்டன் மழலையர் பள்ளியில் கோடைகால சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் பயின்றுவந்துள்ளனர். அந்தவகையில் மதுரை மாநகர் உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த சிவ ஆனந்தி மற்றும் அமுதன் தம்பதியின் மகளான 4 வயது சிறுமி ஆருத்ரா இந்த பள்ளியில் பயிற்சிபெற்று வந்துள்ளார்.
இன்று பள்ளிக்கு வந்த ஆருத்ரா பள்ளியின் பின்புறம் திறந்த நிலையில் கிடந்த தண்ணீர் தொட்டி அருகே சென்று விளையாடியுள்ளார். அப்போது 12 அடி ஆழமுள்ள அந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். சிறுமி விழுந்தது தெரியாமல் நீண்ட நேரமாக பள்ளிவளாகத்தில் தேடிய ஆசிரியர்கள் இறுதியில் சிறுமி தண்ணீர் தொட்டியில் மிதந்தபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போதே சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது மகள் உயிரிழந்ததை கேட்டதும் உடைந்து போன சிறுமியின் தாய் மயங்கி விழுந்ததால், உடனடியாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து அலட்சியமாக செயல்பட்ட ஸ்ரீ கின்டர்கார்டன் பள்ளி நிர்வாகத்தின் மீது அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியின் உயிரிழப்புக்கு பள்ளியின் அலட்சியமே காரணம் என்பதால் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





















