வானில் பறக்க பாராசூட் , கண்களை கவரும் லேசர் லைட் ஷோ.. கொடைக்கானல் கொண்டாட்டம்..!
சுற்றுலா பயணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாராசூட்டில் ஏறி வானில் பறந்தவாறு கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானல் ஏரியை அழகூட்டும் விதமாக அமைக்கப்பட்ட லேசர் லைட் ஷோ சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம். கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது.
கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
தற்போது கோடை கால விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று முதல் 4 நாட்கள் மாலை 6:30 முதல் 8 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி ரசிக்கக்கூடிய கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் லேசர் லைட் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோடை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மாலை நேரங்களில் ஏரியை சுற்றி நடை பயிற்சி மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களை காண வரும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடைக்கானல் நகராட்சி இணைந்து கொடைக்கானல் ஏரியில் லேசர் லைட் ஷோ அமைக்கப்பட்டு உள்ளன. இதனை காண மாலை நேரங்களில் ஏரிப்பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஒளிரும் மின் விளக்குகளை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கொடைக்கானல் க்ளைமேட்டை அனுபவிக்க இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க தற்போது தனியார் நிறுவனத்துடன் இணைந்து தமிழக சுற்றுலாத் துறை பாராசூட் நிகழ்ச்சி வரும் 19ம் தேதி வரை, கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் நடைபெற்று வருகிறது. கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் சுற்றுலா பயணிகள் பங்கேற்கின்றனர். சுற்றுலா பயணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாராசூட்டில் ஏறி வானில் பறந்தவாறு கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வானில் ஒரு ரவுண்ட் வர ரூ.200 கட்டணம் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 15 முதல் 60 வயது வரையுள்ள இரு பாலரும் பயணிக்கலாம். இந்த பாராசூட் நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.





















