ரயில் பயணிகளுக்கு சூப்பர் சலுகை! 'ரயில் ஒன்' செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் 3% தள்ளுபடி! மிஸ் பண்ணிடாதீங்க!
'ஆர்-வாலெட்' (R-Wallet) மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் தொடரும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், ரயில்வே நிர்வாகம் 'ரயில் ஒன்' (Rail One) செயலி மூலம் முன்பதிவு செய்யாத பொதுப்பிரிவு ரயில் டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு மொத்த கட்டணத்தில் 3 சதவீத தள்ளுபடி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை இந்த மாதம் 14ஆம் தேதி முதல் தொடங்கி, வரும் ஜூலை 14ஆம் தேதி வரை மொத்தம் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
இந்திய ரயில்வேயின் IRCTC அறிமுகப்படுத்தியுள்ள இந்த "ரயில் ஒன்" செயலியின் மூலம் பயணிகள் முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை அனுமதி சீட்டு, சீசன் டிக்கெட் என அனைத்தையும் ஒரே இடத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், எந்த ரயில் எந்த நேரத்தில் வருகிறது, எந்த நிலையங்களில் நிற்கிறது, இரு நகரங்களுக்கு இடையே எந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன போன்ற தகவல்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம். அதோடு, ரயிலில் அல்லது ரயில் நிலையத்தில் இருந்தபடியே காலை, மதிய, இரவு உணவு ஆர்டர் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
ஆர் வாலட் (R-Wallet) மூலம் பணம் சேமித்து மின்னணு பரிமாற்றம் செய்யலாம். பயண சீட்டுக்கான பணத்தை திரும்ப பெறுவதும் மிக எளிதாகும். மேலும், "ரயில் மதாத் (Rail Madad)" என்ற பிரிவில் குறைகள், புகார்கள் பதிவுசெய்யலாம். இந்த செயலியில் பயணி தனது பெயர், புகைப்படம் மற்றும் ஆதார் விவரங்களை இணைத்து சீசன் டிக்கெட் பெறலாம். முன்பதிவில்லாத பயணச்சீட்டை பெற, ரயில் நிலையத்திலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் உடனடியாக டிக்கெட் பதிவு செய்யலாம். முன்பே பயணிகள் பட்டியலைச் சேமித்து வைத்திருப்பதனால் ஒவ்வொரு முறையும் தகவல் நிரப்ப தேவையில்லை.
மேலும், காத்திருப்பு டிக்கெட் உறுதியாகிவிட்டதா என்பதை நேரடியாக பார்க்கலாம். ரயில் பெட்டியின் துல்லியமான இடத்தையும் காணலாம். இந்த செயலியில் "Go to Waves" என்ற பகுதி வழியாக, இந்திய அரசின் பிரச்சார் பாரதி நிறுவனத்தின் 'Waves OTT' தளத்தில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்கலாம். இதன் மூலம் ரயில் பயணத்தின் போது நேரத்தை இனிமையாகக் கழிக்க முடியும்.
ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் நின்று அவதிப்பட வேண்டிய நிலையை குறைப்பதோடு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அதிகமாக பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதும் இதன் இலக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. 'ரயில் ஒன்' செயலி மூலம் யூபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் போன்ற எந்த ஆன்லைன் கட்டண முறையையும் பயன்படுத்தி பொதுப்பிரிவு டிக்கெட் வாங்கினாலே தள்ளுபடி தானாகவே சேர்த்துக் கணக்கிடப்படும். இதற்கு இணையாக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 'ஆர்-வாலெட்' (R-Wallet) மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் தொடரும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, டிஜிட்டல் கட்டணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த சலுகை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் Google Play Store-இலும், ஐபோன் பயனர்கள் Apple App Store-இலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தற்போது தெற்கு ரயில்வே மண்டலத்தில் சுமார் 29.5 சதவீதம் பயணச்சீட்டுகள் மொபைல் செயலிகள் மூலம் வாங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தள்ளுபடி திட்டம் அறிமுகமாகியுள்ள நிலையில், மேலும் பலர் டிஜிட்டல் முறைக்கு மாறுவார்கள் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.





















