`உங்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது!’ - வாட்சாப்பில் இப்படி மெசேஜ் வருகிறதா? உஷார்...
வாட்சாப் தளத்தில் பெரும்பாலும் ஃபிஷிங் தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கம். எனினும், பண்டிகை காலங்களில் மோசடி செய்பவர்கள் வழக்கத்தை விட அதிகமாக ஆக்டிவாக இருக்கின்றனர்.
வாட்சாப் தளத்தில் பெரும்பாலும் ஃபிஷிங் தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கம். எனினும், பண்டிகை காலங்களில் மோசடி செய்பவர்கள் வழக்கத்தை விட அதிகமாக ஆக்டிவாக இருக்கின்றனர். உங்களுக்குப் பரிசு பொருள்கள் வழங்குவதாக பரப்பபடும் மெசேஜ்களின் லிங்கைக் க்ளிக் செய்தால் அவை உங்களது தனிப்பட்ட விவரங்களையும், வங்கி விவரங்களையும் எளிதில் இலக்காக மாற்றிவிடுகின்றன. Rediroff.ru என்ற தளத்துடன் அனுப்பப்படும் லிங்கில் க்ளிக் செய்தால் அது ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்களையும், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களையும் தாக்குவது போலவே, விண்டோஸ் கம்ப்யூட்டரையும் தாக்குகிறது. இந்த மோசடியால் வாட்சாப் பயனாளர்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Rediroff.ru என்ற லிங்கை வெவ்வேறு மெசேஜ்களுடன் இந்த மோசடியாளர்கள், வாட்சாப் பயனாளர்களுக்கு அனுப்புகின்றனர். இந்த மெசேஜில் பரிசுகள் கிடைப்பதாகவும், பணம் கிடைப்பதாகவும், போட்டியில் வென்றிருப்பதாகவும், சர்வேயில் பங்குபெற அழைப்பதாகவும் நம்மை வித விதமாக ஆசைகாட்டி உள்ளே இழுக்க முயற்சிகள் நடைபெறூகின்றன. இந்தப் பரிசுகளை வெல்ல சர்வேயில் பங்குபெறுமாறு குறிப்பிட்டுள்ள இந்த மெசேஜ்களில், நாம் சர்வேவை முடித்தவுடன் அது வேறொரு தளத்திற்குச் சென்று, நமது பெயர், வயது, முகவரி, வங்கி விவரங்கள் முதலான தனிப்பட்ட தகவல்களைக் கேட்கிறது. இந்த டேட்டாவைக் கைப்பற்றும் மோசடியாளர்கள், அதனை டார்க் வெப் என்ற இணையத்தின் ஆழமான இடங்களில் விற்பனை செய்து பணம் சம்பாதித்து கொள்கிறார்கள்.
மேலும், இந்த லிங்கின் மூலம் சில கிரிமினல்கள் பயனாளர்களின் ஸ்மார்ட்ஃபோனில் அவருக்கே தெரியாமல் ஆபத்தான செயலிகளையும் இன்ஸ்டால் செய்து விடுகிறார்கள். அது தொடர்ந்து பயனாளரைக் கண்காணித்து, அவரது தனிப்பட்ட விவரங்களை மோசடியாளருக்கு அனுப்பி விடுகிறது.
இதுபோன்ற ஃபிஷிங் தாக்குதல்களைத் தடுப்பது கடினமான பணி என்பதால், பயனாளர்கள் தங்கள் கண்ணைத் திறந்து பார்த்து, ஆன்லைனில் வரும் அனைத்தையும் நம்பாமல் இருக்க வேண்டும். இதுபோன்ற லிங்க் அனுப்பப்பட்டால், முதலில் ஒரு பயனாளர் அதன் உண்மைத் தன்மையை சோதிக்க வேண்டும். ஏதேனும் லிங்கில் Rediroff.ru என்று குறிப்பிடப்பட்டால், அந்த லிங்கில் செல்லாமல் அந்த மெசேஜை அழித்து விடுவது சிறந்தது.
எந்த அதிகாரப்பூர்வ நிறுவனமும் உங்களுக்குப் பரிசு அளிப்பதாகக் கூறி மெசேஜ் அனுப்பாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியே அனுப்பினாலும், அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருப்பவை அனைத்தும் மிகத் தெளிவாக எழுதப்பட்டிருக்கும். இதுபோன்ற மோசடியான மெசேஜ்களில் இலக்கணப் பிழைகள் இருக்கலாம்; லிங்க் சரியாக வேலை செய்யாமல் போகலாம். எனினும், இப்படியான லிங்கைத் தவறுதலாக க்ளிக் செய்துவிட்டால், உங்கள் ஸ்மார்ட்ஃபோனை ஒரு முறை முழுவதும் ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது.
ஸ்கேன் செய்த பிறகு, தேவையில்லாத ஆப்கள் ஏதேனும் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தால், அதனை உடனடியாக நீக்கிவிட வேண்டும். பண்டிகை காலங்களில் அப்பாவி பயனாளர்களுக்குப் பரிசு தருவதாகக் கூறி இவ்வாறான மெசேஜ்கள் பரவுவதால் பயனாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.