Samsung Galaxy | இவ்ளோ அம்சமா? எப்போது வெளியாகும் சாம்சங் கேலக்ஸி S21 FE? இணையத்தில் கசிந்த தகவல்கள்!
சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலைப் போலவே உருவாக்கப்பட்டிருக்கும் புதிய மாடலான சாம்சங் S21 FE மாடல் வெளியிடப்பட்டவுடன் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி S21 FE மாடல் குறித்து சமீபத்தில் தொடர்ந்து மாறுபட்ட செய்திகள் வெளியாகி வருகின்றன. கேலக்ஸி S20 FE மாடலைப் போலவே உருவாக்கப்பட்டிருக்கும் புதிய மாடலான சாம்சங் S21 FE மாடல் வெளியிடப்பட்டவுடன் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த மாடல் ஸ்மார்ட்ஃபோன் வெளியீடு கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காகத் தடைப்பட்டது. இதனை அறிமுகப்படுத்தும் நாள் தொடர்ந்து மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதால், உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சமீபத்தில் வெளியான தகவல் ஒன்றின் படி, சாம்சங் கேலக்ஸி S21 FE மாடல் அடுத்த ஆண்டு நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி 5 முதல் ஜனவரி 8 வரையிலான நாள்களில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இணையத்தில் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்களைக் குறித்த அப்டேட்களை வெளியிடும் ஜான் ப்ரோசர் என்பவர் சாம்சங் கேலக்ஸி S21 FE மாடல் வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார். இந்த மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி 4 அன்று வெளியிடப்படும் எனவும், ஜனவரி 11 முதல் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மாடலை வெளியிடுவதற்கு எனப் பிரத்யேக நிகழ்ச்சியாக இல்லாமல், அமைதியாக அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி S21 FE மாடல் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் போது, உலகின் மற்ற பகுதிகளில் வெளியாகும் அதே வேளையில் இந்தியாவிலும் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன் சிப் குறைபாடு ஏற்பட்டிருப்பதால் இந்த மாடல் வெகுசில இடங்களில் மட்டுமே வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி S21 FE மாடல் நான்கு வண்ணங்களில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. வெள்ளை, கறுப்பு, பிங்க், பச்சை ஆகிய வண்ணங்களில் இந்த மாடல் வெளியிடப்படும்.
சமீபத்தில் இணையத்தில் சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் படங்கள் கசிந்தன. இவை இந்த மாடலின் டிசைன், வண்ணங்கள் முதலானவை குறித்த பார்வையை வழங்கின. இந்த மாடலில் அதன் பின்பக்கத்தின் மேல்புறத்தின் இடப்பக்கத்தின் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலில் Qualcomm Snapdragon 888 பிராசஸர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 6.4 இன்ச் அளவுகொண்ட FHD+ AMOLED டிஸ்பிளே இடம்பெறும் எனத் தெரிகிறது. இதில் டூவல் சிம் வசதி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 4500mAh பேட்டரி பொறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் விலை சுமார் 78 ஆயிரம் முதல் 83 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.