PhonePe | 'மொபைல் ரீசார்ஜ் செய்யணுமா? கட்டணம் செலுத்தணும்'.. PhonePe போடும் புது ப்ளான்!
ஃபோன்பே மூலமாக 50 ரூபாய்க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்யும் நபர்களிடம் இனி 1 ரூபாய் முதல் 2 ரூபாய் செயலாக்க கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோன்பே செயலியின் மூலமாக 50 ரூபாய்க்கு அதிகமாக மொபைல் ரீசார்ஜ் செய்யும் நபர்களிடம் இனி கட்டணமாக சிறு தொகை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வால்மார்ட் குழுமத்தின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலியான ஃபோன்பே செயலியில் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் 1 ரூபாய் முதல் 2 ரூபாய் செயலாக்க கட்டணமாக வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
UPI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் ரீசார்ஜ் மேற்கொள்பவர்களிடம் செயலாக்க கட்டணம் வசூலிக்கும் முதல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலியாகத் தற்போது ஃபோன்பே செயலி கருதப்படுகிறது. இதன் போட்டியாளர்களான கூகுள் பே, பே டிஎம் முதலான செயலிகள் செயலாக்க கட்டணம் என்று மொபைல் ரீசார்ஜ்களுக்காகப் பணம் வசூல் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
`மொபைல் ரீசார்ஜ்களைப் பொறுத்தவரை, வெகுசில வாடிக்கையாளர்களே இதற்காக ஃபோன்பே செயலியைப் பயன்படுத்துவதால் சிறிய பரிசோதனை முயற்சியாக இந்த நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளோம். 50 ரூபாய்க்குக் குறைவான ரீசார்ஜ்களுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படுவதில்லை. 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்பவர்களிடம் 1 ரூபாய் செயலாக்க கட்டணமும், 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களிடம் 2 ரூபாய் செயலாக்க கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. இது பரிசோதனை முயற்சி என்பதால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எந்தக் கட்டணமும் செலுத்துவதில்லை; செலுத்தினாலும் 1 ரூபாய் மட்டுமே செலவு செய்கின்றனர்’ என்று ஃபோன்பே நிறுவனத்தின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
கூகுள் பே செயலிக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலியாக ஃபோன்பே இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தி மட்டும், ஃபோன்பே செயலியில் சுமார் 165 கோடிக்கும் மேலான பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இந்தியா முழுவதும் UPI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் பணப் பரிவர்த்தனையில் சுமார் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பரிவர்த்தனை ஃபோன்பே செயலி மூலம் நடைபெற்றுள்ளது.
`UPI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் பணப் பரிவர்த்தனைக்காக கட்டணம் பெறும் ஒரே செயலியாக நாங்கள் இல்லை. சில பில் கட்டணங்களின் மீது செயலாக்க கட்டணம் வசூலிப்பது சாதாரண நடைமுறை. மேலும் பல்வேறு ஆன்லைன் பரிவர்த்தனை தளங்களிலும் இதுபோல கட்டணம் பெறப்படுகிறது. கிரெடிட் கார்ட் மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளின் மீது மட்டுமே நாங்கள் கட்டணம் வசூலிப்பதாக அறிவித்துள்ளோம்’ என்றும் ஃபோன்பே நிறுவனத்தின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வாடிக்கையாளர்களை மொபைல் ரீசார்ஜ் பக்கம் இழுப்பதற்காக, ஃபோன்பே நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வசதியை உறுதிபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஃபோன்பே செயலியின் மூலம் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு உறுதியாக 50 ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கப்படும் என ஃபோன்பே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 51 ரூபாய்க்கு மேல் இதுவரை மூன்று முறை மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே இந்தக் கேஷ்பேக் சலுகை பொருந்தும் எனவும் ஃபோன்பே நிறுவனம் கூறியுள்ளது.