Apple Air-Pods: ஆப்பிள் ஏர்-பாட்ஸ் - உடல் சூட்டை கூட கண்டுபிடிக்குமாம்..! புதிய சாதனத்தில் இத்தனை வாவ்களா?!
ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள ஏர்பாட்ஸ் ப்ரோ, உடல் சூட்டை கணக்கிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள ஏர்பாட்ஸ் ப்ரோ, உடல் சூட்டை கணக்கிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு உடல்நலன் சார்ந்த அம்சங்கள் இருக்கும் எனவும், குறிப்பாக செவித்திறன் குறைபாடு கொண்ட நபர்களுக்கான சாதனமாகவும் உதவும் என கூறப்படுகிறது.
மக்கள் விரும்பும் ஆப்பிள்:
உலகளவில் தரமான தொழில்நுட்ப சாதனங்கள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது ஆப்பிள் நிறுவனம் தான். அந்நிறுவனத்தின் சாதனங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு, உயர்தொழில்நுட்ப மற்றும் உடல்நலன் தொடர்பான கூடுதல் அம்சங்கள் ஆகியவை, பயனாளர்கள் ஆப்பிள் சாதனங்களை அதிகம் விரும்பி வாங்க முக்கிய காரணமாக உள்ளது. தரமான கணினிகளை உருவாக்குவதை இலக்காக கொண்டு 1976ம் ஆண்டு உருவான ஆப்பிள் நிறுவனம், காலத்திற்கேற்றவாறு தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொண்டே வந்தது. அதன் காரணமாக தான் தற்போது, உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஆப்பிள் ஐபோன், ஐபேட், ஐபாட் மற்றும் இயர்பேட் என பல்வேறு சாதனங்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. அதோடு, பயனாளர்களின் எதிர்பார்ப்பு உணர்ந்து அவற்ற மேம்படுத்தி வருகிறது.
புதிய ஏர்-பாட்ஸ் ப்ரோ:
வயர்லெஸ் ஏர்பாட்களில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஏர்பாட்ஸ் தான் மிகவும் சிறந்தது என்பதில் சந்தேகமும் இல்லை. காரணம் அந்த ஒரு சாதனத்தின் மூலம் மட்டும் கடந்த 2021ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு விற்பனையை எட்டியது. ஆனால், அதன் வடிவமைப்பில் இருந்த குறைபாடுகள் காரணமாக வெளிபுற ஓசையை கட்டுப்படுத்துவதில் இருந்து தவறியது. இதனால் தான் தற்போது புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ அறிமுகம் செய்ய உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டே வெளியானது. வெளிப்புற காற்று உள்புகாதவாறு புதிய ஏர்பாட்ஸ் வடிவமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, கடந்த ஆண்டும் வெளியன தகவலின் படி ஏர்-பாட்ஸ் இரண்டாம் தலைமுறை, பழைய மாடலை விட பல்வேறு கூடுதல் அம்சங்களை பெற்று இருக்கும் என கூறப்பட்டது.
உடல் நலனை கண்காணிக்குமா?
புதிய ஏர்-பாட்ஸ் ப்ரோவில் என்ன மாதிரியான அம்சங்கள் இடம்பெறும் என அதிகாரபூர்வ தகவல்கள் இல்லாவிட்டாலும் , அது உடல்நலனை கண்காணிக்கும் முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும் என சில சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, செவித்திறன் குறைபாடு உள்ள பயனாளர்களுக்கு உதவும் விதமாக, காது கேட்கும் இயந்திரமாகவும் புதிய ஏர்-பாட்ஸ் ப்ரோ இருக்கும். ஐஓஎஸ் மூலம் அதனை இயக்கும் விதமாக வடிவமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதோடு, காது துவாரங்கள் வழியாக பயனாளரின் உடல் வெப்பநிலையை கூட, புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ கணக்கிடும் என கூறப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் நலமுடன் உள்ளனரா என்பதை பயனாளரகள் கைகடிகாரம் மூலம் கிடைக்கும் தரவுகளை காட்டிலும் கூடுதல் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
புதிய சார்ஜர்:
புதிய ஏர்பாட்ஸ் ப்ரோவிற்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரம், இந்த புதிய ஏர்பாட்ஸ்-ப்ரோ எப்போது வெளியாகும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம், இந்த புதிய ஏர்பாட்ஸ்-ப்ரோ போன்ற சாதனங்களின் மீதான எதிர்பார்ப்பின் காரணமாக தான், அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்தது.