Elon Musk: 'everything app' என்றால் என்ன ? எலான் மஸ்க் உருவாக்குகிறாரா? சிறப்பம்சங்கள் என்ன?
முன்னதாக ட்விட்டரில் டிஜிட்டல் பணம் செலுத்தும் யோசனையைப் பற்றி மஸ்க் தனது குழுவுடன் பலமுறை ஆலோசித்திருக்கிறார்.
டெஸ்லா நிறுவனரும் , உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் தற்போது செயலி ஒன்றை உருவாக்க முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. பிரபல பிளாகிங் தளமான ட்விட்டரை வாங்கப்போவதாக அறிவித்த எலான் மஸ்க் , அதில் இழுபறி காட்டி வருகிறார். இந்த நிலையில் “ எவரித்திங் ஆப் “ என்ற ஒன்றை உருவாக்கலாம் என யோசிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்."சூப்பர் ஆப்" என்பது ஆசியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் அதைப் பிரதிபலிக்க முயற்சித்து வருகின்றன. அதைத்தான் எலான் மஸ்கும் ”everything app” என குறிப்பிடுகிறார்.
சூப்பர் ஆப் அல்லது everything app என்றால் என்ன ?
‘சூப்பர் ஆப்’ என்பது அனைத்துச் சேவைகளையும் உள்ளடக்கிய ஒரு செயலி அல்லது தளம் எனலாம். இப்போது நாம் பொருள்களை வாங்க, உணவுக்கு ஆர்டர் செய்ய, வங்கியில் பணம் கட்ட, ஆன்லைனில் சாட் செய்ய , கால் டாக்ஸியை அழைக்க என ஒவ்வொரு சேவைக்கும் ஒரு செயலியைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த சேவைகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஒரு செயலிதான் சூப்பர் ஆப் அல்லது everything app .
சூப்பர் ஆப்பிற்கு உதாரணம் ?
சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வி-சாட் , அலிபாபாவின் ‘அலிபே’ (Alipay) ,இந்தோனேசியாவின் ‘கோஜெக்’ (Go-Jek) போன்ற செயலிகள்தான் இப்போதைய காலக்கட்டத்தில் சூப்பர் செயலி என அழைக்கப்படுகின்றன.சீன சூப்பர் செயலியான WeChat ஆனது, ஒரு மதிப்பீட்டின்படி, 1 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்டுள்ளது
சூப்பர் ஆப்பை உருவாக்குகிறாரா எலான் மஸ்க் ?
ஜூன் மாதம் ட்விட்டர் ஊழியர்களுடனான கேள்வி-பதில் அமர்வின் போது, ஆசியாவிற்கு வெளியே WeChat போன்ற சூப்பர் செயலிக்கு நிகரான பயன்பாடு எதுவும் இல்லை என்று மஸ்க் குறிப்பிட்டார். "நீங்கள் அடிப்படையில் சீனாவில் WeChat இல் வாழ்கிறீர்கள்," என எலான் மஸ்க் குறிப்பிட்டதன் மூலம் அவர் அப்படியான செயலியை உருவாக்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. முன்னதாக ட்விட்டரில் டிஜிட்டல் பணம் செலுத்தும் யோசனையைப் பற்றி மஸ்க் தனது குழுவுடன் பலமுறை ஆலோசித்திருக்கிறார்.
முன்னதாக இந்தியாவில் டாடா குழுமம் 'Neu’ என்னும் பெயரிலான சூப்பர் ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.