Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் பெண்களுக்கான 400 மீ டி20 போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார்
ஜப்பானில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்தார்.
ஜப்பானின் கோபியில் இன்று (மே 20) நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவு பந்தயத்தில் 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனையாக செய்து புதிய வரலாறு படைத்தார். இவரை தொடர்ந்து, துருக்கியின் அய்செல் ஒன்டர் 55.19 வினாடிகளுடன் இரண்டாவது இடத்தையும், ஈக்வடாரின் லிசான்ஷெலா அங்குலோ 56.68 வினாடிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
முன்னதாக, இதற்காக தகுதி சுற்றின்போது தீப்தி ஜீவன்ஜி பெண்கள் 400 மீட்டர் டி20 ஹீட் பைனலுக்கு தகுதி பெற்றதன் மூலம் ஒரு புதிய ஆசிய சாதனையை 56.18 வினாடிகளில் எட்டி, 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸுக்கு தகுதி பெற்றார்.
A star ⭐️ is born@ParalympicIndia's Deepthi Jeevanji smashed the WORLD RECORD in the women's 400m T20 and grabbed her first world title at the age of 20.
— #ParaAthletics (@ParaAthletics) May 20, 2024
She has started running in 2022!
⏰55.07#Kobe2024 #ParaAthletics @kobe2022wpac @Paralympics pic.twitter.com/ATdhyI8Q1L
தீப்தி ஜீவன்ஜி, கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் பெண்களுக்கான 400 மீ டி20 போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நேரத்தில், தாய்லாந்து வீராங்கனை ஒரவன் கைசிங் 59.00 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், ஜப்பான் வீராங்கனை நினா கன்னோ 59.73 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024ல் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை வென்று கெத்து காட்டியுள்ளது. கடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மூன்று தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்ற நிஷாத் குமார், ப்ரீத்தி பால்..
நேற்று (மே 19ம் தேதி) உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது நாளில் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமார், ஆடவருக்கான டி47 உயரம் தாண்டுதலின் இறுதிப் போட்டியில் 1.99 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதைத் தொடர்ந்து, பெண்களுக்கான டி35 200 மீட்டர் இறுதிப் போட்டியில் ப்ரீத்தி பால் 30.49 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம், இந்தியாவின் 200 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். மேலும், பாரா தடகள வீரர் யோகேஷ் கதுனியா ஆடவர் F56 பிரிவில் வட்டு எறிதலில் 41.80 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆடவர் ஷாட்புட் எஃப்40 போட்டியில் இந்தியாவின் ரவி ரோங்காலி பதக்கம் எதுவும் பெறாமல் 6வது இடம் பிடித்தார். இருப்பினும், அவர் 9.75 மீ தூரம் எறிந்ததால், 2024 ஆம் ஆண்டு பாரிஸ் பாராலிம்பிக்கிற்கான இடத்தை உறுதி செய்தார்.