Long Jumper Shaili Singh: அஞ்சு பாபி ஜார்ஜ் அடையாளம் கண்ட 17 வயது தடகள ஸ்டார்... யார் இந்த ஷைலி சிங்?
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற பின்பு ஷைலி சொன்னது, “எனக்கு வெறும் 17 வயதுதான். அடுத்து தங்கம் வெல்ல வேண்டும்”
கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், மகளிர் நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் 17வயது வீராங்கனை ஷைலி சிங்.
இந்தியாவின் தடகள நட்சத்திரம் அஞ்சு பாபி ஜார்ஜின் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பதால் இவர் மீது அதிக எதிர்பார்பு இருந்தது. இறுதிப் போட்டியில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்டு வந்த ஷைலி சிங் 6.59 மீட்டர் தூரம் தாண்டி அசத்தினார். ஸ்வீடன் வீராங்கனை தன்னுடைய நான்காவது முயற்சியில் 6.60 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார். 1 செமீ தூரம் குறைவாக தாண்டியதால், தங்கப்பதக்க வாய்ப்பை நழுவவிட்டுள்ளார் ஷைலி சிங்.
ஷைலியின் இந்த பர்ஃபாமென்ஸ் விளையாட்டு உலகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய விளையாட்டு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள் ஷைலிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் தடகள நட்சத்திரமாக உருவாகி வரும் இந்த இளம் வீராங்கனை யார்? இதோ ஷைலியின் தடகளம் பயணம்!
The leap that won Shaili Singh the silver. India's 7th medal ever at the World Athletics U20 C'ship.
— Nikhil Naz (@NikhilNaz) August 22, 2021
Missed the Gold by just 1cm. pic.twitter.com/WLgP2Tc6xC
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்ஸியை பூர்வீகமாக கொண்ட ஷைலியை, அவரது தாய் வினிதா கவனித்து வந்துள்ளார். தையல் வேலை செய்யும் வினிதா, தனது மகள் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தவுடன், அதுமட்டுமின்றி திறமையாளராகவும் இருப்பதை கண்டுக்கொண்ட அவர், உத்வேகப்படுத்தியுள்ளார். ஆனால், விளையாட்டில் சாதிப்பதற்கான வழிகள் அவர்களுக்கு புலப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜான்சிக்கு சென்றிருந்த முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜும் அவரது கணவர் ராபர்ட் ஜார்ஜும், ஷைலியை கண்டுள்ளனர். ஷைலியின் திறமைகளை கண்டு அவரை கையோடு பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளார் அஞ்சு.
#ShailiSingh, you make us all very proud as you add another feather to your cap at the #WorldAthleticsU20Championships by winning a silver medal.
— Anju Bobby George (@anjubobbygeorg1) August 22, 2021
This feat would not have been possible without the support of @afiindia @Media_SAI, @NsscSai, @IndiaSports, @OGQ_India pic.twitter.com/x4wiuIAy6z
பின்பு, நடந்தது எல்லாம் அதிரடிதான். பெங்களூருவில் உள்ள அஞ்சு பாபி விளையாட்டு அறக்கட்டளை சார்பில் பயிற்சி எடுத்து கொள்ள ஷைலி தேர்வு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் 4.55 மீட்டர் தாண்டிய ஷைலிக்கு தீவிர பயிற்சி கொடுத்து இந்தியாவின் நேஷனல் ரெக்கார்டு ஹோல்டராக மெருகேற்றியுள்ளார் பயிற்சியாளர் ராபர்ட் ஜார்ஜ். கடந்த நான்கு ஆண்டுகளில், நீளம் தாண்டுதல் விளையாட்டில் தீவிரமாக பயிற்சி எடுத்து வரும் ஷைலி, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிருக்கான நீளம் தாண்டுதல் உலக தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவில், இவர்தான் ரெக்கார்டு ஹோல்டர்!
இந்த ஆண்டு நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற பின்பு ஷைலி சொன்னது, “எனக்கு வெறும் 17 வயதுதான். அடுத்து தங்கம் வெல்ல வேண்டும்”
இளம் வயதேயான இவர், இன்னும் அடுத்து நடக்க இருக்கும் 20 வயதுக்குட் உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் தொடர்களில் பங்கேற்கலாம். இன்று தவறவிட்ட தங்கத்தை அடுத்த முறை எட்டிப்பிடிக்க காத்திருக்கிறார் ஷைலி. இனிதான் ஷைலியின் பயணம் ஆரம்பம், சர்வதேச ஃபோடியம்களில் ஷைலி பதக்கம் வென்று இந்திய கொடியை ஏந்தப்போவது வெகு தூரத்தில் இல்லை.
வாழ்த்துகள் ஷைலி!