Formula 4 : ”சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? இன்று மாலை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் தனியார் கார் பந்தய அமைப்பு இணைந்து சென்னையில் நாளை மறுநாள் சனிக்கிழமை அன்றும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் பந்தயம் நடத்தப்படுகிறது
சென்னையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு நாட்களாக நடந்து வந்த இந்த விசாரணையில், இன்று மாலை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சி
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் தனியார் கார் பந்தய அமைப்பு இணைந்து சென்னையில் நாளை மறுநாள் சனிக்கிழமை அன்றும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் புயல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கார் பந்தயத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
தீவுத் திடலை சுற்றி நடைபெறும் போட்டி
இந்த பந்தயம் சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் கார் பந்தயத்தை நடத்த வேண்டும் என்ற முடிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இருந்ததால், பகலில் போக்குவரத்து பிரச்னை வரும் என்பதால் இரவில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக இரவை பகலாக்கும் வகையில் அதிக ஒளி திறன் கொண்ட மின் விளக்குகள் பொறுத்தப்பட்டு வருகின்றன.
8 ஆயிரம் பேர் பார்க்கலாம்
8 ஆயிரம் பேர் அமர்ந்து, நின்றுகொண்டு பார்க்கும் வகையிலும் பொதுமக்களும் இதில் பங்கேற்று கார் பந்தயத்தை ரசிக்கும் வகையிலும் இருக்கைகள், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தமிழ்நாட்டில் அதுவும் தமிழ்நாடு அரசு நடத்தும் முக்கியமான போட்டி என்பதால் இந்த போட்டியை எப்படியேனும் நடத்தி முடித்து வெற்றி பெற வேண்டும் என்பதில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை உறுதியாக உள்ளது.
உயர்நீதிமன்றத்தின் விதிகளை பின்பற்றிய அரசு
அதற்காக உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய எல்லா விதிகளையும் பின்பற்றி அதற்கான அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில், மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கும் நிலையில், பெரும்பாலும் போட்டியை நடத்திக்கொள்ளவே உத்தரவு பிறப்பிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது