Rohit Sharma: ரோகித் சர்மாவை நீக்கக் கோரிய கோலி - என்ன நடக்கிறது இந்திய அணியில்!
இந்திய அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்க வேண்டும் என்று விராட் கோலி பரிந்துரைத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வருபவர் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் விராட்கோலிதான் இந்திய அணியின் கேப்டனாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து உலக கோப்பை தொடருக்கு பிறகு விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார். அவரது அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விராட் கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அணியின் எதிர்கால நலன் கருதி ஆலோசனை ஒன்றை வழங்கியதாக கூறி பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் உள்ள நபர் ஒருவர் அளித்த தகவலின்படி, இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பதிலாக அந்த பொறுப்பில் இளம் வீரர் ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.
தற்போது ரோகித் சர்மாவிற்கு 34 வயதாகிற காரணத்தால், இளம் வீரர் ஒருவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கோலி அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலி ஒருநாள் போட்டிக்கான துணை கேப்டனாக கே.எல். ராகுலையும், டி20 அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்டையும் நியமிக்க வேண்டும் என்று விரும்பியதாகவும் அந்த நபர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நலன் கருதியே இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
விராட் கோலி நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, டி20 போட்டி கேப்டன்சிப்பில் இருந்து விலகினாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக தொடர்ந்து செயல்படுவதாக அறிவித்திருந்தார். விராட்கோலி டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால், அந்த பொறுப்பிற்கு துணை கேப்டன் ரோகித் சர்மாவே நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், இளம் வீரர் ஒருவரிடம் துணை கேப்டன் பொறுப்பை ஒப்படைக்குமாறு விராட் கோலி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டுமே துணை கேப்டனாக செயல்படுகிறார். டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா தொடக்க வீரராக மட்டுமே உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் பொறுப்பை ரஹானே வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி குறிப்பிட்டதாக கூறப்படும் கே.எல்.ராகுலும், ரிஷப் பண்டும் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக கருதப்பட்டு வருகின்றனர். ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு 29 வயதான கே.எல். ராகுலும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 23 வயதான ரிஷப் பண்டும் கேப்டனாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ரிஷப் பண்ட்தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். கே.எல்.ராகுலும் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தொடக்க வீரராகவும், சில சமயங்களில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : "இந்திய கிரிக்கெட்டின் உண்மையான சொத்து விராட் கோலி" - சவ்ரவ் கங்குலி புகழாரம்