IND vs BAN Kanpur Test:2 கேட்ச்.. 35 ரன்கள் - சச்சின் சாதனையை முறியடிப்பாரா கோலி?
600 இன்னிங்ஸ்களில் 27,000 சர்வதேச ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெற இன்னும் 35 ரன்கள் மட்டுமே உள்ளது.
சாதனை படைப்பாரா கோலி?
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நாளை மறு நாள் செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக, முதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டு இன்னிங்ஸ்களிலும் வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த போட்டியில் 17 ரன்களை கோலி கடந்த போது உள்நாட்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய அணிக்காக தனது 219வது போட்டியில் கோலி இந்த சாதனையை படைத்தார்.
சென்னை டெஸ்டில் விராட் கோலியால் ரன்களை குவிக்க முடியவில்லை என்றாலும், கான்பூரில் நடக்கும் 2வது டெஸ்ட் அவருக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கும். அதாவது 600 இன்னிங்ஸ்களில் 27,000 சர்வதேச ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெற இன்னும் 35 ரன்கள் மட்டுமே உள்ளது. இந்த மைல்கல்லை எட்டுவது 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இருக்கும். விராட் கோலி இதுவரை 593 இன்னிங்ஸ்களில் 26,965 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் சாதனை படைத்துள்ளார். இன்றுவரை, சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்கள் என்ற மைல்கல்லை உலகளவில் மூன்று வீரர்கள் மட்டுமே எட்டியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர், இலங்கையின் குமார் சங்கக்கார மற்றும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்.
டெஸ்டில் 115 கேட்சுகள் பிடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிப்பாரா?
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் சச்சின் டெண்டுல்கரின் 115 கேட்சுகள் என்ற சாதனையை முறியடிப்பதன் மூலம் மற்றொரு சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் விராட் கோலி பெறுவார். கோலி தற்போது 113 கேட்ச்களை பிடித்துள்ளார், முன்னிலை பெற இன்னும் மூன்று கேட்ச்கள் மட்டுமே தேவை. மேலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகள் என்ற முக்கிய மைல்கல்லை அடைவார். அதேபோல், 2வது டெஸ்டில் 7 பவுண்டரிகள் அடித்து இந்த சாதனையை எட்டுவார்.