US Open 2022: யுஎஸ் ஓபன்: என்னிடம் கொஞ்சம் டென்னிஸ் மிச்சம் உள்ளது... -நம்பர் 2 வீராங்கனையை வீழ்த்தியபின் செரீனா
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் நம்பர் 2 வீராங்கனையை தோற்கடித்து செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டென்னிஸ் உலகில் மிகவும் முக்கியான கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்று யுஎஸ் ஓபன். ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடர் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தத் தொடருடன் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் இவர் சாம்பியன் பட்டத்துடன் விடைபெறுவாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.
இந்நிலையில் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் வெற்றி பெற்று இருந்த செரீனா வில்லியம்ஸ் இன்று இரண்டாவது சுற்றில் விளையாடினார். இரண்டாவது சுற்றில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள எஸ்டோனியா வீராங்கனையை எதிர்த்து விளையாடினார். எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவெய்ட்டை எதிர்த்து செரீனா வில்லியம்ஸ் விளையாடினார்.
SERENA WILLIAMS KEEPS ON WINNING pic.twitter.com/1mwixyVjtw
— US Open Tennis (@usopen) September 1, 2022
இந்தப் போட்டியில் முதல் செட்டை செரீனா 7-6 என்ற கணக்கில் வென்றார். எனினும் இரண்டாவது செட்டை அனெட் கோன்டாவெயிட் 6-2 என்ற கணக்கில் வென்றார். இருவரும் தலா ஒரு செட்டை வென்று இருந்தனர். மூன்றாவது செட்டில் செரீனா வில்லியம்ஸ் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக அந்த செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதாக வென்றார். அத்துடன் 7-6,2-6,6-2 என்ற கணக்கில் போட்டியை வென்று மூன்றாவது சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றார்.
இந்தப் போட்டிக்கு பிறகு செரீனா வில்லியம்ஸ் பேசினார். அதில்,“செரீனா வில்லியம்ஸ் ஒரு நல்ல வீராங்கனை. நான் கடந்த சில ஆண்டுகளாக நிறையே போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதன்விளைவு இங்கு கடந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறேன். இது தெரிந்து இருந்தால் நான் முன்பே நியூயார்க் வந்திருப்பேன். இங்கு வந்த ரசிகர்கள் சிறப்பாக உற்சாகம் அளித்தனர்.
Serena, surprised at her level? 😏 pic.twitter.com/QP41An73FE
— US Open Tennis (@usopen) September 1, 2022
இன்னும் என்னிடம் சில டென்னிஸ் மிச்சம் உள்ளது. அதை நான் சிறப்பாக விளையாடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் உலகில் செரீனா:
டென்னிஸ் விளையாட்டில் செரீனா வில்லியம்ஸ் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக இவர் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். அத்துடன் 14 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 2 கலப்பு இரட்டையர் பிரிவிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார்.
இவை தவிர மகளிர் டபிள்யூடிஏ 73 ஒற்றையர் பட்டங்களையும், 23 இரட்டையர் பிரிவு பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார். இவற்றுடன் சேர்ந்து 4 ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்றுள்ளார். இவருடைய நீண்ட நெடிய டென்னிஸ் வாழ்க்கையில் 319 வாரங்கள் சர்வதேச வீராங்கனை பட்டியலில் முதல் இடத்தில் இருந்து சாதனைப் படைத்தார்.
செரீனா வில்லியம்ஸ் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் இவர் எந்த ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இவர் முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.