T20 World Cup 2024: டேய் எப்புட்றா... டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற உகாண்டா!
வரலாற்றில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளது உகாண்டா அணி.
டி 20 உலகக் கோப்பை
50 ஓவர் உலகக் கோப்பை தொடரைப் போல் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரும் மிகவும் முக்கியமான ஒன்று.
ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் குவாலிஃபையர் போட்டியில், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக தகுதி பெற்றிருக்கிறது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற 5வது ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
முன்னதாக, 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இரண்டு அணிகளை பங்கேற்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஏழு ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஆப்பிரிக்க பிராந்திய டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று தொடர் நடைபெற்றது.
வரலாற்றில் முதல் முறையாக:
இதில், உகாண்டா அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றது. தான்சானியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது உகாண்டா அணி. அதேநேரம், ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய உகாண்டா, நைஜீரியா மற்றும் ருவாண்டா அணிகளை வீழ்த்தி உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றிருக்கிறது.
ருவாண்டாவை வெளியேற்றிய உகாண்டா:
இன்று (நவம்பர் 30) ருவாண்டா அணிக்கு எதிரான போட்டியில் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ருவாண்டா அணி 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய உகாண்டா அணி 8.1 ஓவர்கள் முடிவிலேயே வெற்றியை கைப்பற்றியது.
அதன்படி, 1 விக்கெட்டை மட்டுமே இழந்த அந்த அணி 66 ரன்கள் எடுத்தது. அதன்படி, உகாண்டா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சைமன் செசாசி மற்றும் ரோனக் படேல் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதில், கடைசி வரை களத்தில் நின்ற சைமன் செசாசி 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். ரோனக் படேல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரோகர் முகேஷா 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அந்த அணியை வெற்றி பெறச் செய்தார்.
2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அணிகள்:
2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளும் நடத்துவதால், இரு அணிகளும் நேரடியாக தகுதிபெற்றன. இதுபோக, புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா, உகாண்டா என மொத்தமாக 20 அணிகள் தகுதிபெற்றுள்ளன.