Parabadminton: இந்தியாவை வீழ்த்தி முன்னேறியது இந்தியா! பாரலிம்பிக்கில் சுவாரஸ்யம்!
உலக தரவரிசையில் முதல் நிலை வீரரும் 5 முறை உலக சாம்பியனுமான பிரமோத் பகத் மற்றொரு இந்திய வீரரான, உலக தரவரிசையில் 3-ம் இடத்தில் இருக்கும் மனோஜ் சார்காரை எதிர்கொண்டார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பேட்மிண்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடகளத்திற்கு பிறகு இந்தியா பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் முக்கியமான விளையாட்டு பேட்மிண்டன் தான். இதில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் பிரமோத் பகத், பாலக் கோலி, சுஹேஷ் யேத்திராஜ், மனோஜ் சர்கார் உள்ளிட்ட 7 இந்தியர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆடவர் பாரா பேட்மிண்டன் எஸ்.எல்-3 பிரிவில் உலக தரவரிசையில் முதல் நிலை வீரரும் 5 முறை உலக சாம்பியனுமான பிரமோத் பகத் மற்றொரு இந்திய வீரரான, உலக தரவரிசையில் 3-ம் இடத்தில் இருக்கும் மனோஜ் சர்காரை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 21-10 என முதல் கேமை பிரமோத் கைப்பற்றினார். ஆனால், அடுத்த கேமில் திருப்பி அடித்த மனோஜ், கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடினார். இந்த கேமை, 23-21 என்ற புள்ளி கணக்கில் மனோஜ் சர்கார் கைப்பற்றினார். பரபரப்பாக சென்ற இந்த போட்டியின் கடைசி கேமை, 21-9 என்ற புள்ளிக்கணக்கில் வென்று போட்டியை கைப்பற்றினார் பிரமோத் சர்கார்.
பாரா பேட்மிண்டன் விளையாட்டைப் பொருத்தவரை, க்ரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவர். முதல் போட்டி இன்று முடிவடைந்துள்ள நிலையில், இரு இந்திய வீரர்கள் மற்றுமொரு க்ரூப் சுற்று போட்டியில் விளையாட உள்ளனர். பிரமோத் பகத்துக்கு இன்று ஒரு வெற்றி கிடைத்துள்ள நிலையில், அடுத்த போட்டியையும் கைப்பற்றி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற காத்திருக்கிறார். பாரா பேட்மிண்டனில் பதக்கம் வெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. மனோஜ் சர்காரை பொருத்தவரை, அடுத்து நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
#Tokyo2020 #Paralympics #Badminton: Manoj Sarkar saves 2 match points & forces a decider against Pramod Bhagat! The No.1 was already involved in a 3-game thriller in mixed doubes and now he is being pushed all the way in the singles. He had a 7-point lead in the 2nd games too. pic.twitter.com/ELcBFr1Nbd
— Vinayakk (@vinayakkm) September 1, 2021
முன்னதாக, பாரா பேமிண்டன் உலக தரவரிசையில் நம்பர் வீராங்கனையான சுசுகியை எதிர்த்து தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள பாலக் கோலி விளையாடினார். இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே சுசுகி ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். இந்த போட்டியில், 21-4,21-7 என்ற கணக்கில் மொத்தமாக 20 நிமிடங்களில் போட்டியை வென்றார் சுசிகி. முதல் போட்டியில் தோல்வி அடைந்ததன்மூலம் பாலக் கோலி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும்.
மற்றொரு போட்டியான, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி குரூப் பி-யில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஜோடி இன்று தனது முதல் குரூப் போட்டியில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த மசூர் லூகாஸ் மற்றும் நோயல் ஃபௌஸ்டெயின் ஆகியோரை எதிர்த்து விளையாடியது. இதில் 21-9,15-21,21-19 என்ற கணக்கில் லூகாஸ்-நோயல் ஜோடி இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலியை தோற்கடித்தனர். இந்திய ஜோடி அடுத்த குரூப் போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடியை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.