Tokyo Paralympics 2020: மிலிட்டரி TO பாராலிம்பிக்.. நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்ட சோமன் ரானா!
2006-ம் ஆண்டு, எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு விபத்தால், கால் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, பாரா விளையாட்டுகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் சோமன் ரானா.
டோக்கியோ பாராலிம்பிக் தொடரில், வரலாறு காணத பதக்க மழையை பொழிந்து வருகிறது இந்தியா. 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றுள்ள இந்தியாவுக்கு, நூலிழையில் இன்னொரு பதக்க வாய்ப்பு இன்று பறிபோனது.
பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். அந்த வரிசையில், ஆண்களுக்கான குண்டு எறிதல் எஃப்-57 விளையாட்டில் சோமன் ரானா பங்கேற்றிருந்தார்.
இந்த போட்டியில் ஏழாவதாக களமிறங்கிய சோமன் ரானா, முதல் வாய்ப்பிலேயே 13.81 தூரம் வீசி சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட ஐந்து வாய்ப்புகளில், இந்த தூரத்தை எட்ட முடியவில்லை. அவரை தொடர்ந்து களமிறங்கிய மற்ற நாட்டு வீரர்கள் சோமன் ரானா வீசிய தூரத்தைவிட குறைவாக தூரத்திலேயே குண்டு எறிந்தனர். ஆனால், சீனா மற்றும் பிரேசில் அணி வீரர்கள் முறைய 15.00 மற்றும் 14.85 தூரத்தை கடந்து முன்னிலை பெற்றனர். கடைசியாக களமிறங்கிய பிரேசில் வீரர் பாலினோ 15.10 தூரம் வீசி முதல் இடம் பிடித்தார். இதனால், போட்டியில் கடைசி வரை மூன்றாவது இடத்தி இருந்து பதக்க வாய்ப்பை தக்க வைத்திருந்த இந்திய வீரர் சோமன் ரானா, நான்காவது இடம் பிடித்து நிறைவு செய்தார்.
Know Your Para Athlete
— SAI Media (@Media_SAI) September 2, 2021
🇮🇳's ace shot putter from the Indian Army, @SomanRana2 is confident of bringing honor & pride to the nation at Tokyo #Paralympics
He had joined Army in 2001 as a sepoy in Gorkha Rifles. His talent in 🥊 helped him become part of his Unit's boxing team
1/4 pic.twitter.com/1yB0iZ98tD
கடந்த 2001-ம் ஆண்டு கூர்க்கா படையில் ராணுவ வீரராக பணியாற்றிய சோமன் ரானா, குத்துச்சண்டையில் மிகுந்து ஆர்வமுடையவர். ராணுவத்தின் குத்துச்சண்டை அணியில் விளையாடியவர். 2006-ம் ஆண்டு, எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு விபத்தால், கால் பகுதியில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பாரா விளையாட்டுகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். குண்டு எறிதலில் பயிற்சி எடுத்து கொண்ட அவர், சர்வதேச விளையாட்டு அரங்கில் தடம் பதித்தார். 38 வயதாகும் அவர், தனது முதல் ஒலிம்பிக் தொடரில் நூலிழையில் பதக்க வாய்ப்பை மிஸ் செய்துள்ளார்.