Thomas Cup 2022: தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: முதல் முறையாக பதக்கத்தை உறுதி செய்த இந்தியா !
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தாம்ஸ் கோப்பை ஆடவர் குழு பேட்மிண்டன் 2022 போட்டிகளில் தாய்லாந்து நாட்டில் கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் லக்ஷ்யா சென்,கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய், சிராக் செட்டி-சத்விக் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி நேற்று காலிறுதி போட்டியில் பலம் வாய்ந்த மலேசிய அணியை எதிர்த்து விளையாடியது. தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற வலுவான மலேசிய அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது.
இதில் முதல் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷ்யா சென் மலேசிய வீரர் லீ ஸியா ஜியாவிடம் 21-23,9-21 என்ற நேர் கேம்களில் தோல்வி அடைந்தார். அதன்பின்னர் இரட்டையர் பிரிவில் சிராக் செட்டி-சத்விக் இணை கோ ஃபை-நுர் ஜோடியை 21-15,21-19 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து கிடாம்பி ஸ்ரீகாந்த் மலேசிய வீரர் யங்கை 21-11,21-17 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தினார். இதன்காரணமாக இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.
A team that went with a mission and the historic milestone is crafted by ensuring the 1st ever #ThomasCup2022 medal only vendictates the decision to select the best shuttlers to represent🇮🇳including @PRANNOYHSPRI
— BAI Media (@BAI_Media) May 12, 2022
Kudos to the whole team👏@himantabiswa#TUC2022#IndiaontheRise pic.twitter.com/uFwp7TFFl1
அடுத்து இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காரகா-பஞ்சாலா இணை ஆரோன் சியா-டோ யி ஜோடியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசிய இணை 21-19, 21-17 என்ற கணக்கில் வென்றது. இதனால் 2-2 என இரு அணிகளும் சமமாக இருந்தனர். வெற்றியாளரை தீர்மானிக்க கடைசியாக ஒற்றையர் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய வீரர் பிரணாய் மலேசிய வீரர் லியோங் ஜூங்கை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரணாய் 21-13, 21-8 என்ற கணக்கில் எளிதில் வென்றார். இதன்மூலம் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி அசத்தியது.
இதன்மூலம் 43 ஆண்டுகளுக்கு பிறகு தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இந்திய அணி இன்று மாலை நடைபெறும் அரையிறுதி போட்டியில் டென்மார்க் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதற்கு முன்பாக இந்திய அணி 1952,1955 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் தாமஸ் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. அந்த மூன்று முறையும் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. இதன்காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்திருந்தது. இம்முறை அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்