கோவில்பட்டியில் நேஷனல் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகள்: தேதிகள் அறிவிப்பு
இளம் தமிழக வீரர்கள் இடம் பெற இது ஒரு உந்துதலாக இருக்கும் - நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி.
நேஷனல் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டியில் வரும் 17ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது - இந்தியா முழுவதும் இருந்து 30 அணிகளைச் சேர்ந்த 540 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர் பெற்ற நகங்களில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, இங்கு இருந்து ஹாக்கி வீரர்கள், இந்திய ஹாக்கி, தேசிய அணி மற்றும் புகழ்பெற்ற பல ஹாக்கி அணிகளில் விளையாடி உள்ளனர். ஹாக்கி வீரர்கள் மட்டுமல்ல, இங்குள்ள ரசிகர்கள் போட்டியின் நுணக்கம் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்பதால் கோவில்பட்டி ஹாக்கிபட்டி என்று அழைப்பது வழக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12 வது தேசிய அளவிலான ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி போட்டி மே 17 முதல் மே 28 வரை நடைபெற உள்ளது.இது நம்ம கேம் (ithu namma game) ஸ்லோகனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் 12வது ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல் தரை மைதானத்தில் பகல் மற்றும் மின்னொளியில் மே மாதம் 17-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 30 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் 540 வீரர்கள் பங்கு பெற்று மொத்தம் 50 போட்டிகள் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் சிறந்த விளையாடும் ஹாக்கி வீரர்கள் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் காலை 6.30 மணி முதல் மாவை 8 மணி வரை நடைபெறுகிறது. இப்போட்டிக்காக தமிழக அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக உத்தரபிரதேசம் மற்றும் சென்னையில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிய கோவில்பட்டியை சேர்ந்த 5 வீரர்கள் இந்திய ஜூனியர் அணி தேர்வாகியுள்ளனர். அதைபோல் இந்திய சீனியர் அணிக்கு கார்த்திக் ஆகிய 2 பேர் தேர்வாகியுள்ளனர்” என்றார்.
இப்போட்டியில் தேசிய மற்றும் சர்வதேச நடுவர்கள் பங்குபெற்று இப்போட்டியை சிறப்பிக்க உள்ளனர். இப்போட்டியை நடத்துவதன் மூலம் வரும் காலங்களில் இளம் தமிழக வீரர்கள் இடம் பெற இது ஒரு உந்துதலாக இருக்கும் என்றார்.