Tamil Thalaivas Abishek: படிப்பில் ஆர்வம் கிடையாது; கேவலப்பட்டாலும் வாய்ப்பு கிடைக்குமானுதான் பார்ப்பேன்: தமிழ் தலைவாஸ் அபிஷேக்!
கேவலப்பட்டாலும் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் என தமிழ் தலைவாஸ் வீரர் அபிஷேக் கூறியுள்ளார்.
புரோ கபடி லீக்:
10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்தாண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இதில், கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லி அணியுடன் மோதியது. இதில், அசத்தலாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி தங்களது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. அதன்படி, 31 - 42 என்ற அடிப்படையில் தபாங் அணியை வீழ்த்தியது. அதேபோல், கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது தமிழ் தலைவாஸ் அணி. இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 48 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது.
பின்னர், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் அதிரடியாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 36- 38 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இப்படி கடந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அந்த அணி, பின்னர் விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. அதேநேரம் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெரும் முனைப்புடன் இருக்கிறது தமிழ் தலைவாஸ்.
இதனிடையே தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி வீரர் அபிஷேக் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கபடி பயணம்:
தான் கபடி விளையாட்டில் நுழைந்தது பற்றி பேசிய அவர், “கபடி தன்னுடைய வாழ்க்கையில் கோச் மூலம் தான் வந்தது. எனக்கு 8 வயது இருக்கும் பொழுதே கபடி விளையாட ஆரம்பித்துவிட்டேன். முதன் முதலாக எங்கள் ஊரில் உள்ள கோவில் மைதானத்தில் தான் விளையாட ஆரம்பித்தேன். அப்போது அங்கு வந்த கோச் என்னை பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். இப்படித்தான் எனது கபடி பயணம் ஆரம்பம் ஆனது.
கன்னியாகுமாரி கபடி கிளப்பில் இருந்து உருவான அபிஷேக் அது தொடர்பான தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அப்போது, “அழத்தங்கரை கிளப்பில் ரவிச்சந்திரன் என்ற கோச் தான் எனக்கு அங்கு உறுதுணையாக இருந்தார். நான் அதிகமாக யாருடனும் வைத்துக்கொள்ள மட்டேன். ஒரு சிலரிடம் மட்டும் தான் நெருக்கமாக பழகுவேன். அவர்களிடம் தான் என்னுடைய கஷ்டங்கள் பற்றி ஓபனாக பேசுவேன்.
அவர்கள் தான் என்னை மோட்டிவேட் செய்வார்கள். அதேபோல் எனது தந்தையும் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். எனக்கு மிகக்குறைவான நண்பர்கள் தான்” என்று கூறினார்.
படிப்பில் ஆர்வம் கிடையாது:
தொடர்ந்து பேசிய அவர், “ படிப்பில் எனக்கு அவ்வளவு ஆர்வம் கிடையாது. எப்போதும் கபடி பயிற்சியை தான் மேற்கொள்வேன். எனது அப்பா என்னை மைதானத்திற்கு தான் அடிக்கடி செல்ல சொல்வார். அம்மா, என்னை அடிபடாமல் விளையாடச் சொல்வார். எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் என்னை கபடி விளையாடச் செல்ல வேண்டாம் என்று தடுத்ததில்லை. அப்பா டீ கடையில் இருக்கிறார். அம்மா வீட்டை பார்த்துகொள்கிறார். இரண்டு தம்பிகள் கல்லூரி படிக்கின்றனர்.
மேலும், கிளப் ஆட்டங்களில் விளையாடியது பற்றி பேசுகையில்,”கிளப் மேட்ச் விளையாடும் பொழுது ப்ரஷர் இருக்காது. ஒவ்வொரு போட்டியும் சவாலாக இருக்கும். கேவலப்பட்டாலும் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.