தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை: வெள்ளிப் பதக்கம் வென்று SA கல்லூரி மாணவி அசத்தல்.!
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை பளு தூக்கும் போட்டியில், மாநில அளவிலான 45 கிலோ பிரிவு பளு தூக்கும் போட்டியில் ஆர்.வி.ஓவியா வெள்ளிப் பதக்கத்தையும், ரூ. 75,000 பரிசுத் தொகையையும் பெற்று சாதனை புரிந்தார்.
முதலமைச்சர் கோப்பை:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தின.
தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்கள் சர்வதேச அரங்கில் சாதிக்க முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் களம் அமைத்துக் கொடுத்து வருகின்றன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், ஓட்டப்போட்டி, கூடைப்பந்து, நீச்சல், பேட்மிண்டன், பளு தூக்குதல் என மொத்தமாக 53 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
எஸ்.ஏ கல்லூரி மாணவி சாதனை:
அப்போது, எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் உணவு மேலாண்மைத் துறை முதலாம் ஆண்டு மாணவி ஆர்.வி. ஓவியா பெண்களுக்கான மகளிர் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.
அக்டோபர் 23, 2024 அன்று ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 45 கிலோ பிரிவு பளு தூக்கும் போட்டியில் ஆர்.வி.ஓவியா வெள்ளிப் பதக்கத்தையும், ரூ. 75,000 பரிசுத் தொகையையும் பெற்று சாதனை புரிந்தார்.
இந்த வெற்றியானது, கல்லூரியின் உடற்கல்வித் துறையின் அயராத முயற்சியையும், தடகளத் திறமைகளை வளர்ப்பதற்கும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கும் கல்லூரியின் அர்ப்பணிப்பு உணர்வையும் பிரதிபலிப்பதாய் விளங்குகிறது, எஸ்.ஏ.கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.