Sourav Ganguly Biopic : 'தாதா' கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாகிறது...! உறுதி செய்தார் "பெங்கால் பிரின்ஸ்" சவ்ரவ்...!
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு பாலிவுட் படமாக எடுக்கப்படுவதை கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பதவி வகிப்பவர் சவ்ரவ் கங்குலி. இன்று இந்திய கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் உலகின் தலைசிறந்த அணியாக திகழ்வதற்கான முன்னெடுப்பை முதலில் தொடங்கியவர் கங்குலிதான். இளம் வீரர்கள் மூலம் இந்திய அணியை வலுவான அணியாக கட்டமைத்தவர் கங்குலி.
கடந்த சில காலங்களாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வீரர்களில் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ்.தோனி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. கடந்த ஜூலை மாதமே இதுதொடர்பான தகவல்கள் வெளியானது. ஆனால், மேற்கொண்டு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், சவ்ரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தனது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதை உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுளளது.
Cricket has been my life, it gave confidence and ability to walk forward with my head held high, a journey to be cherished.
— Sourav Ganguly (@SGanguly99) September 9, 2021
Thrilled that Luv Films will produce a biopic on my journey and bring it to life for the big screen 🏏🎥@LuvFilms @luv_ranjan @gargankur @DasSanjay1812
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ கிரிக்கெட்தான் எனது வாழ்க்கை. அதுதான் எனக்கு நம்பிக்கையையும், திறனையையும் அளித்து என்னை முன்னோக்கி கொண்டு சென்று, போற்றப்பட வேண்டிய பயணத்தை அளித்துள்ளது. லவ் பிலிம்ஸ் எனது வாழ்க்கை பயணத்தை திரைப்படமாக்க உள்ளனர். எனது வாழ்க்கை பெரிய திரைக்கு கொண்டு வர உள்ளனர்.” என்று பதிவிட்டுள்ளனர். கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 49 வயதான சவ்ரவ் கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 ஆயிரத்து 212 ரன்களை குவித்துள்ளார். தனிநபர் அதிகபட்சமாக 239 ரன்களை டெஸ்ட் போட்டிகளில் குவித்துள்ளார். 35 அரைசதங்கள், 16 சதங்கள் மற்றும் 1 இரட்டை சதம் அடித்துள்ளார். மேலும், 311 ஒருநாள் போட்டிகளில் ஆடி 11 ஆயிரத்து 363 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 22 சதங்களும், 72 அரைசதங்களும் அடங்கும். 59 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1349 ரன்களை குவித்துள்ளார்.
இடது கை பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல், வலது கை பந்துவீச்சாளராகவும் திகழ்ந்த கங்குலி டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கங்குலி கேப்டனான பிறகே இந்திய அணிக்குள் வீரேந்திர சேவாக், யுவராஜ்சிங், முகமது கைப், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், ஆஷிஷ் நெஹ்ரா, அஜித் அகர்கர், இர்பான் பதான் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் எம்.எஸ்.தோனியையும் இந்திய அணிக்காக அறிமுகப்படுத்தியவரும் சவ்ரவ் கங்குலியே.
சவ்ரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி அப்போது பல்வேறு சாதனைகளை படைத்தது. மினி உலக கோப்பையை இலங்கையுடன் இணைந்து கைப்பற்றியது, 2003 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, நாட்வெஸ்ட் தொடரை வென்றது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை இந்திய அணி நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.