(Source: ECI/ABP News/ABP Majha)
நான்கு வீராங்கனைகள் ஹாட்ரிக்....20 கோல்கள் அடித்து தெலுங்கானாவை வாரி சுருட்டிய தமிழ்நாடு கால்பந்து அணி..
தமிழக அணி இன்று தனது முதல் போட்டியில் தெலுங்கானா அணிக்கு எதிராக மோதியது. இதில் தமிழக அணி 20-0 என பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
26 வது தேசிய சீனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் கேரளாவில் நேற்று தொடங்கியிருக்கிறது.
இந்த தொடரில் எப்போதும் மணிப்பூர் அணியே ஆதிக்கம் செலுத்தும். இதுவரை நடந்துள்ள 26 சீசன்களில் 20 முறை மணிப்பூர் அணியே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அப்பேற்பட்ட மணிப்பூர் அணியை 2017-18 சீசனில் தமிழக அணி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இந்த சம்பவம்தான் பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியை மையமாக வைத்து எடுக்க தூண்டியதாகவும் செய்திகள் உண்டு.
இந்த சீசனில் தமிழக அணி H பிரிவில் பஞ்சாப், பெங்கால் மற்றும் தெலுங்கானா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அணிகள் அத்தனையும் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப்பெறும்.
தமிழக அணி இன்று தனது முதல் போட்டியில் தெலுங்கானா அணிக்கு எதிராக மோதியது. இதில் தமிழக அணி 20-0 என பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
தொடக்கம் முதல் இறுதி வரை 90 நிமிடங்களும் தமிழக வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். 4-4-2 என்ற ஃபார்மேஷனோடு களமிறங்கியிருந்த தமிழ்நாடு அணியில் ஃபார்வடில் ஆடிய சந்தியா மட்டும் 8 கோல்களை அடித்துக் கொடுத்தார். தமிழக அணிக்காக சந்தியா ஆடும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாதியில் தமிழகம் மொத்தமாக 8 கோல்களை அடித்திருந்தது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே மாளவிகா ஒரு கோலை அடிக்க, அடுத்து நான்காவது நிமிடத்திலேயே சந்தியா ஒரு கோலை அடித்தார். 10 வது நிமிடத்தில் சரிதா ஒரு கோலை அடிக்க 14 வது நிமிடத்தில் துர்கா ஒரு கோலை அடித்தார். முதல் 15 நிமிடங்களுக்குள் மட்டும் 4 கோல்கள். அங்கேயே ஏறக்குறைய தமிழகத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. முதல் பாதியில் மாளவிகா 2, சந்தியா 3, சரிதா 1, துர்கா 2 என மொத்தம் 8 கோல்கள் வரவே தமிழகம் 8-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் இன்னும் கொடூரமாக தெலுங்கானா அடிவாங்கியது. இரண்டாம் பாதியில் மட்டும் தமிழக வீராங்கனைகள் 12 கோல்களை அடித்திருந்தனர். கடைசி 10 நிமிடத்தில் மட்டும் 4 கோல்கள் வந்திருந்தது. 86 வது நிமிடத்தில் சந்தியா மட்டும் 2 கோல்களை அடித்தார். மாளவிகா, சந்தியா, சரிதா, துர்கா என தமிழக வீராங்கனைகள் நால்வரும் ஹாட்ரிக் கோல்களை அடித்திருந்தனர். பிரியதர்ஷினி ஒரு கோலை அடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக இறுதியில் 20-0 என தமிழக அணி அபார வெற்றியை பெற்றது.
மாரியம்மாள், இந்துமதி, கார்த்திகா, சௌமியா என இந்திய அணிக்காக ஆட சென்றிருக்கும் முக்கிய தமிழக வீராங்கனைகள் இல்லாமலேயே தமிழக அணி இப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருப்பது பாராட்டப்பட வேண்டியது.