Sachin Gift: புதிய மைதானத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு சச்சின் அளித்த ஸ்பெஷல் பரிசு.. என்ன தெரியுமா?
வாரணாசியில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் உதவியுடன் மைதானம் கட்டப்பட்டு வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மைதானத்திற்கான அடிக்கலை நாட்டினார்.
வாரணாசியில் புதிய சர்வதேச மைதானம்:
இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் மற்றும் திலீப் வெங்சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின்போது பிரதமர் மோடிக்கு சச்சின் சிறப்பு பரிசு ஒன்றை வழங்கினார். 'நமோ' என்ற பெயர் பொறிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி பரிசாக வழங்கப்பட்டது.
அதுமட்டும் இன்றி, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தாங்கள் கையெழுத்திட்ட பேட்டை பிரதமர் மோடிக்கு வழங்கினர். விழாவில் பேச தொடங்கிய பிரதமர் மோடி, 'ஹர் ஹர் மஹாதேவ்' என முழக்கம் எழுப்பி தனது உரையை தொடங்கினார்.
"மகாதேவ் நகரில் உள்ள இந்த மைதானம் ‘மகாதேவ்’வுக்கே அர்ப்பணிக்கப்படும். காசியில் சர்வதேச மைதானம் கட்டினால் இங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெறுவார்கள். இந்த மைதானம் பூர்வாஞ்சல் பிராந்தியத்தின் அடையாளமாக மாறும். ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாடியதற்காக திட்டுவார்கள்.
"உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும்"
ஆனால், அது இப்போது இல்லை. ஒரு பகுதியில் விளையாட்டு உள்கட்டமைப்பு கட்டமைக்கப்படும் போது, அது இளம் விளையாட்டுத் திறமையாளர்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கிறது" என மோடி தெரிவித்தார்.
மோடியை தொடர்ந்து பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரபிரதேசத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முதல் முறையாக வாரணாசியில் கட்டும் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு ஆர்வலர்கள் சார்பாகவும் பிரதமர் மோடியை வரவேற்கிறேன்.
வாரணாசியில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் உதவியுடன் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இது உத்தரபிரதேசத்தின் மூன்றாவது சர்வதேச மைதானம். பிசிசிஐயின் மேற்பார்வையில் கட்டப்பட்ட முதல் சர்வதேச மைதானமாகும். கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் பீகார் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு இது ஒரு தளத்தை வழங்கும். உ.பி.க்கு இந்த பரிசை வழங்கிய பிசிசிஐ மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இந்த மைதானத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, நிலத்தை கையகப்படுத்த, 121 கோடி ரூபாய் செலவிட்டதாகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அதன் கட்டுமானத்திற்காக, 330 கோடி ரூபாய் செலவழிக்கும் என்றும் கூறப்படுகிறது.
30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மைதானம் கட்டப்பட்டுள்ளது. ஏழு ஆடுகளங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராஜதலாப் பகுதியில் ரிங் ரோடுக்கு அருகில் அமைந்துள்ள இந்த மைதானம் 2025 டிசம்பரில் தயாராகிவிடும்.