French Open 2022 Winner:14-வது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற ரபேல் நடால்..
22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 14 பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ள ரபேல் நடால் அதோடு சேர்த்து பல சாதனைகளையும் படைத்துள்ளார்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவிற்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூட்டும், ரபேல் நடாலும் மோதினர். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரபேல் நடால், முதல் மூன்று செட்டையும் வென்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச்சென்றார். அதன்மூலம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 14 பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ள ரபேல் நடால் அதோடு சேர்த்து பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
தொடக்கம் முதலே அதிரடி
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீசில் நடந்து வந்தது. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட் ஆகியோர் இன்று மோதினர். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே நடால் புள்ளிகளை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தினார். இதனால், முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் தன்வசப்படுத்தினார்.
2வது செட்
இதனை தொடர்ந்து 2வது செட்டில் ரூட் அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில் 3-1 என்ற புள்ளி கணக்கில் ரூட் முன்னிலையில் காணப்பட்டார். ஆனால், அதில் இருந்து மீண்டு வந்த நடால் 3 புள்ளிகளை கைப்பற்றி 4-3 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றார். தொடர்ந்து முனைப்புடன் விளையாடி 2வது செட்டையும் 6-3 என்ற புள்ளி கணக்கில் நடால் கைப்பற்றினார்.
நடால் வெற்றி
3வது செட்டிலும் அவரது அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. அவர் ஒரு கட்டத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றி 5-0 என முன்னேறி ரூட்டுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். எனினும், ஒரு புள்ளியை கூட ரூட் கைப்பற்ற முடியாமல் திணறினார். இந்நிலையில், போட்டியின் முடிவில் 6-3, 6-3, 6-0 என்ற புள்ளி கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.
14வது முறை சாம்பியன் பட்டம்
இந்த வெற்றியின் மூலம், நடால் சாம்பியன் பட்டமும் தட்டி சென்றுள்ளார். இது நடாலின் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்திற்கான 14வது வெற்றியாகும். இதன் மூலம்பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை வாங்கும் மிகவும் வயதான வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அதோடு ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 22 என்று தன் கணக்கை உயர்த்தி உள்ளார் ரபேல் நடால்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

