PV Sindhu With PM Modi | பிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம்..புகைப்படம் பகிர்ந்த பி.வி.சிந்து!
பிவி சிந்து தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பிரதமருடன் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட படங்களைப் பகிர்ந்திருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐஸ்கீரிம் சாப்பிட்டார். ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு தன்னுடன் பிவி சிந்து ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் பிவி சிந்து தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பிரதமருடன் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட படங்களைப் பகிர்ந்திருந்தார்.
தனது பகிர்வில், ‘ஒருவழியாக பிரதமர் மோடியுடன் ஐஸ்க்ரீம் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எங்கள் ஒலிம்பிக் வீரர்களுக்காகச் செய்த உதவிகள் அனைத்துக்கும் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். நன்றியின் அடையாளமாக எனது பாட்மிண்டன் ராக்கெட்டை அவருக்கு அளித்தேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.
View this post on Instagram
முன்னதாக, 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாகப் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை போட்டிகளுக்கு முன்பு காணொளியில் சந்தித்தார் பிரதமர் மோடி. இவர்களில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட அழைப்பு விடுத்திருந்தார் அவர். பி.வி.சிந்து தனது பெற்றோருடன் காணொளி வழியாக பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது 2016 ரியோ ஒலிம்பிக் போட்டி சமயத்தில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி. ரியோ ஒலிம்பிக் போட்டி சமயத்தில் பி.வி.சிந்து தனது போனை உபயோகிப்பதற்கும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கும் முழுவதுமாக தடைவிதித்திருந்தார் அவருடைய பயிற்சியாளர் புல்லெல்லா கோபிசந்த்.
‘ஐஸ்க்ரீம் சாப்பிட இப்போதும் உங்களுக்கு அனுமதி இல்லையா?’ என நகைச்சுவையாகக் கேட்டார் பிரதமர். அதற்கு பதிலளித்த சிந்து, தனது விளையாட்டுப் பயிற்சிக்கான டயட் காரணமாக ஐஸ்க்ரீம் மிகவும் அரிதாகவே சாப்பிடுவதாகச் சொன்னார் அவர். அதற்கு மறுபதிலளித்த பிரதமர் சிந்து டோக்கியோவிலிருந்து திரும்பியதும் அவரைத் தன்னுடன் ஐஸ்க்ரீம் சாப்பிட அழைப்பு விடுத்திருந்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற பல்வேறு தடகளப் போட்டியாளர்களின் வாழ்க்கை பற்றியும் தனது ஆன்லைன் சந்திப்பில் பகிர்ந்தார் பிரதமர்.
இதற்கிடையே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுத் திரும்பிய வீரர்கள் 15 ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றும் நிகழ்வன்று பங்கேற்றனர். பிரதமர் மோடியின் விருந்தினர்களாக இவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்வின்போது பிரதமர் வீரர்களுடன் கலந்துரையாடினார். அதில், நாட்டு மக்கள் அனைவரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளை நேசிக்கின்றனர். ஆனால் அது மட்டுமில்லை பதக்கம் வென்று இந்தியாவின் பலகோடி இளைஞர்களுக்கு இவர்கள் வழிகாட்டியாகியுள்ளனர் என மோடி குறிப்பிட்டார். அதன்பிறகு பிரதமர் இல்லத்தில் ஒலிம்பிக் வீரர்களுக்கான சிறப்பு விருந்திலும் அனைவரும் பங்கேற்றனர். அந்த விருந்தில் பங்கேற்ற புகைப்படங்களைதான் பிவி சிந்து பகிர்ந்திருந்தார்.