PT Usha: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர்.. தேர்வானார் தங்க மங்கை பி.டி.உஷா!
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய நாட்டின் விளையாட்டு நிர்வாகத்தில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் வகையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து பி.டி.உஷாவிற்கு வாழ்த்துகள் குவியத் தொடங்கியுள்ளது.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் 3 முறை பங்கேற்று முதல் 10 இடங்களுக்குள் வந்தவர் பி.டி.உஷா. சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ, விளையாட்டுத் துறையில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா ஆகிய விருதுகளைப் பெற்றவர். அண்மையில் பாஜக சார்பில் மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் இவர் தேர்வு செய்யப்பட்டார்.
ஆசியப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப்ஸ், ஒலிம்பிக், உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப் உள்பட பல போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்காக நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களை அள்ளி வந்தவர்.
1984 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சில மணித் துளி இடைவெளியில் பதக்க வாய்ப்பை இழந்தவர். ஒலிம்பிக்கில் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் அடுத்த தலைமுறையை உருவாக்கி வருகிறார்.
கடந்த மாதம் 27ம் தேதி 58 வயதான பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இன்று நடந்த வாக்கெடுப்பில் உயர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.