Pele : கால்பந்தின் ராஜாதி ராஜா.. கால்பந்து பேரரசர்... பீலேவின் வாழ்க்கை சாதனைகள் இதோ..!
மூன்று உலகக் கோப்பை கோப்பைகளை வென்ற ஒரே கால்பந்து வீரரான பீலேவின் வாழ்க்கை சாதனைகளை இங்கே பார்க்கலாம்.
எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 வயதில் காலமானார். பிரேசிலில் உள்ள சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியளவில் அவர் தனது இறுதி மூச்சு விட்டார். 'கால்பந்து பேரரசர்' பீலே தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார்.
பிரேசில் ஜாம்பவான் மரணமடைந்ததையடுத்து கால்பந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. 15 வயதில் சாண்டோஸ் அணிக்காக விளையாடத் தொடங்கி 17 வயதில் உலகக் கோப்பையை வென்றார். 1969 இல், பீலே விளையாடுவதைப் பார்ப்பதற்காக நைஜீரியாவின் உள்நாட்டுப் போர் ஓரிரு நாட்கள் நிறுத்தப்பட்டது. மூன்று உலகக் கோப்பை கோப்பைகளை வென்ற ஒரே கால்பந்து வீரரான பீலேவின் வாழ்க்கை சாதனைகளை இங்கே பார்க்கலாம்.
மூன்று உலகக் கோப்பையை வென்ற ஒரே நாயகன்:
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கால்பந்து வீரர் பீலே. பீலே 1958 மற்றும் 1962 இல் தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பைகளை வென்றார். பின்னர் 1970ல் உலகக் கோப்பை கோப்பை மீண்டும் பீலேவின் கைகளில் வந்தது. இதையடுத்து மூன்று முறை உலகக் கோப்பை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற மிகப்பெரிய பிம்பம் பீலேவுக்கு கிடைத்தது. தற்போது வரை இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. 20 வீரர்கள் 2 முறை கால்பந்து உலகக் கோப்பையை வென்றுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் மூன்றாவது முறை வென்றதில்லை.
பிரேசில் அணிக்காக அதிக கோல்:
பிரேசில் அணி உலகக் கோப்பை தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக திகழ்ந்ததற்கு பீலே ஒரு முக்கிய காரணம். தனது உலகக் கோப்பை வாழ்க்கையில் 12 கோல்களை அடித்துள்ளார். அதேபோல். பிரேசில் அணிக்காக 92 போட்டிகளில் விளையாடி 77 கோல்களை அடித்துள்ளார்.
ஒட்டுமொத்த கோல்களில் எண்ணிக்கை:
பீலே பிரேசிலுக்காக 92 போட்டிகளில் 77 கோல்கள் உட்பட, தனது 21 ஆண்டுகால வாழ்க்கையில் 1,363 போட்டிகளில் 1,281 கோல்களை அடித்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார்.
இளம் வயது உலகக் கோப்பை சாம்பியன்:
1958 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார்.வெறும் 17 ஆண்டுகள் 249 நாட்களில் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றார் 'கால்பந்து பேரரசர் பீலே. இதன்மூலம் இளம் வயதில் உலகக் கோப்பையை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.
மிக இளம் வயதில் முதல் கோல்:
1957 ஆம் ஆண்டு ஜூலை 7ம்தேதி மராகனா நகரில் நடந்த சர்வதேச கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக பீலே பிரேசில் அணியில் முதன்முதலாக அறிமுகமாகி தனது 16 வயதிலேயே முதல் கோலை பதிவு செய்தார்.
பீலே உலகக் கோப்பையில் தனது முதல் கோலை 17 ஆண்டுகள் 239 நாட்களில் அடித்தார். உலகக் கோப்பை அரங்கில் இளம் வயதில் கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். 17 ஆண்டுகள் மற்றும் 244 நாட்களில் உலகக் கோப்பையில் தனது முதல் ஹாட்ரிக் அடித்தார். 1958 உலகக் கோப்பை அரையிறுதியில் பிரான்ஸுக்கு எதிராக பீலே ஹாட்ரிக் கோல் அடித்தார்.