‛ஒன்றாக வந்தோம்... ஒன்றாக செல்கிறோம்...’ பாகிஸ்தான் ‛கோச்’ மிஸ்பா மற்றும் வக்கார் யூனிஸ் ராஜினாமா!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் திடீரென விலகியுள்ளனர்.
![‛ஒன்றாக வந்தோம்... ஒன்றாக செல்கிறோம்...’ பாகிஸ்தான் ‛கோச்’ மிஸ்பா மற்றும் வக்கார் யூனிஸ் ராஜினாமா! Pakistan Cricket Team's Head coach Misabh ul Haq and Bowling coach Waqar Younis resigns from their respective posts ‛ஒன்றாக வந்தோம்... ஒன்றாக செல்கிறோம்...’ பாகிஸ்தான் ‛கோச்’ மிஸ்பா மற்றும் வக்கார் யூனிஸ் ராஜினாமா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/06/94a5b230eda9a251071ba11a42f0197a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வாரியத்தில் சமீப காலங்களாக பிரச்னை நிலவிவருவதாக சில செய்திகள் வெளியாகின. இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு பிரதமர் இம்ரான் கான் புதிய தலைவரை விரைவில் நியமிப்பார் என்று கூறப்பட்டது. எனினும் அந்த அறிவிப்பு குறித்து எந்தவித செய்தியும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் திடீரென பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் தற்போது தங்களது பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் இருவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தங்களுடைய முடிவை தெரிவித்துள்ளனர். அதன்படி மிஸ்பா உல் ஹக், "வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது தனிமைப்படுத்தப்பட்டிருந்த சூழலில் நான் என்னுடைய குடும்பம் மற்றும் என்னுடைய தற்போதைய நிலை குறித்து சற்று சிந்தித்தேன். அதன்படி நான் நீண்ட நாட்கள் என்னுடைய குடும்பத்தைவிட்டு தனியாக இருப்பதை உணர்ந்தேன். ஆகவே இனிமேல் சற்று அவர்களுடன் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். அதனால் தற்போது என்னுடைய பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தேன்.
இது சற்று சவாலான முடிவு தான் என்றாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. மேலும் தற்போது டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியமான தொடர்கள் வர உள்ளன. இந்த சமயத்தில் நான் விலகியது சற்று வருத்தமான விஷயம் என்றாலும், என்னால் இந்த மனநிலையுடன் சரியாக பணி செய்ய முடியாது. ஆகவே வேறு ஒரு நபர் இந்தப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதால் தான் இப்போது என்னுடைய முடிவை அறிவித்துள்ளேன்" எனக் கூறியுள்ளார்.
அவரைப் போல் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸூம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதன்படி, "மிஸ்பா அவருடைய முடிவை என்னுடன் கூறியவுடன் நானும் என் முடிவை எடுத்துவிட்டேன். ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒன்றாக தான் இந்தப் பணிக்கு வந்தோம். ஆகவே ஒன்றாக ராஜினாமா செய்வோம் என்ற முடிவை நான் எடுத்தேன். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுடம் இத்தனை நாட்கள் பணியாற்றியது எனக்கு மனநிறைவை அளித்தது" எனத் தெரிவித்துள்ளார்.
Asif and Khushdil return for ICC Men's T20 World Cup 2021
— PCB Media (@TheRealPCBMedia) September 6, 2021
More details ➡️ https://t.co/vStLml8yKw#PAKvNZ | #PAKvENG | #T20WorldCup pic.twitter.com/9samGbJgDJ
முன்னதாக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணி அறிவிக்கப்பட்ட சில நொடிகளில் இவர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் வரும் 2022ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர்கள் தற்போது திடீரென ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இடைக்கால பயிற்சியாளர்களாக முஸ்தாக் அகமத் மற்றும் அப்துல் ரசாக் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க:இந்தியாவுடன் மோதும் பாக்., அணி அறிவிப்பு: ஓரங்கட்டப்பட்ட மாலிக், சர்ப்ராஸ்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)