(Source: ECI/ABP News/ABP Majha)
Vinesh Phogat: வினேஷ் போகத் தகுதிநீக்கம்! சர்வதேச மல்யுத்த விதிகள் சொல்வது என்ன? ஓர் அலசல்
எடை அதிகரிப்பு காரணமாக வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மல்யுத்த விதிகள் சொல்வது என்னென்ன? என்பதை கீழே தெளிவாக காணலாம்.
ஒலிம்பிக் தொடர் பாரிஸ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய நாள் இந்திய ரசிகர்களுக்கு கருப்பு நாளாக மாறிவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தை 100 கிராம் அதிகளவில் இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்வதாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விதிகள் சொல்வது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக, சர்வதேச மல்யுத்த அமைப்பின் விதி பகுதி 3ல் போட்டியில் பங்கேற்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து தெளிவாக கூறியுள்ளது. அதில் எடை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரத்தை கீழே காணலாம்.
- சம்பந்தப்பட்ட எடைப்பிரிவுக்கான அனைத்து போட்டிகளுக்கும் தினமும் காலையில் எடை பரிசோதனை நடைபெறும். எடை மற்றும் மருத்துவ கட்டுப்பாடு 30 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
- போட்டி நடக்கும் மறுநாள் காலையிலும்( தொடர்ந்து போட்டி நடக்கும் பட்சத்தில்) எடை பரிசோதனை நடக்கும். இந்த எடை பரிசோதனை 15 நிமிடங்கள் நடக்கும். இதில் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும்.
- எடை பரிசோதனை செய்யாத மல்யுத்த வீரர் கண்டிப்பாக போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்.
- மல்யுத்த வீரர்கள் தங்கள் உரிமம் மற்றும் அங்கீகாரத்துடன் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்க வேண்டும்.
- எடை பரிசோதனையின்போது வீரர்கள் உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும்.
- மல்யுத்த வீரர்களின் விரல் நகங்களச் மிகவும் குட்டையாக வெட்டப்பட வேண்டும்.
- மல்யுத்த வீரர்கள் பொருத்தமற்ற ஆடையை அணிந்து வந்தால் அவர்கள் எடை பரிசோதனைக்கு நடுவர்கள் மறுக்க வேண்டும்.
- நடுவர்கள் தவறான உடைகளை அணிவதால் ஏற்படும் ஆபத்து குறித்து மல்யுத்த வீரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
- மல்யுத்த வீரரோ/ வீராங்கனை போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலோ அல்லது எடை பரிசோதனை தோற்றதால் போட்டி தரவரிசையில் கடைசி இடத்தையே பிடிப்பார்.
வினேஷ் போகத் கடைசி இடம் ஏன்?
மல்யுத்த விதியின்படி ஒரு வீராங்கனை எடை பரிசோதனையில் தோல்வி அடைந்தாலோ அல்லது கலந்து கொள்ள இயலவில்லை என்றாலோ அவர் கடைசி இடத்திற்கு தள்ளப்படுவார். இதன் காரணமாகவே வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் 50 கிலோ எடைப்பிரிவில் கடைசி இடத்திற்கு சென்றார்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். மேலும், வினேஷ் போகத் பங்கேற்ற பிரிவின்கீழ் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.