மூளைச்சாவு அபாயம் இருந்தும், உயிரை பணயம் வைத்த வினேஷ் போகத்! மருத்துவர்கள் பகீர்!
ஒரே இரவில் எடை குறைப்பதற்காக வினேஷ் போகத் பல்வேறு முயற்சிகளை செய்துள்ளார். ஒரு துளி தண்ணீர் கூட குடிக்காமல் இரவு முழுவதும் நீராவிக் குளியல் மேற்கொண்டார். இவை ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கை.
பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தின் 50 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டி வரை சென்று அசத்திய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது 140 கோடி இந்தியர்களின் கனவை சுக்குநூறாக்கியுள்ளது. உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டி வரை சென்றபோதிலும், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உயிரை பணயம் வைத்த வினேஷ் போகத்: நேற்று காலை வரை, வினேஷ் போகத்தின் எடை 49.9 கிலோவாக இருந்ததாக கூறப்படுகிறது. அவருடைய வழக்கமான எடை சுமார் 57 கிலோ என்றும் அதை 50 ஆகக் குறைக்க அவர் கடுமையான முயற்சிகளை செய்ததாக கூறப்படுகிறது.
இதற்காக, அவர் ஒரு துளி தண்ணீர் கூட குடிக்கவில்லை என்றும் தூங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இரவு முழுவதும் நீராவிக் குளியல் மேற்கொண்டுள்ளார். முடியை கூட வெட்டிகொண்டதாகவும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் அவர் செய்ததாகவும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.
வினேஷ் போகத்தின் முயற்சிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும் அவரை உயிரை பணயம் வைத்து இப்படி செய்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரே இறவில் எடையை குறைப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மருத்துவர்கள் சொல்வது என்ன? இதுகுறித்து டெல்லி மகாராஜா அக்ரசென் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் டாக்டர் சஞ்சய் குப்தா கூறுகையில், "2-3 கிலோகிராம் எடையை ஒரே இரவில் இழப்பது சாத்தியமற்றது மட்டுமல்ல, ஆபத்தானது" என்றார்.
இதுதொடர்பாக மற்றொரு மருத்துவ நிபுணர் டாக்டர் மஞ்சீதா நாத் தாஸ் கூறுகையில், "அப்படி செய்வது அபாயகரமானதாகவும் மாறலாம். நமது உடல் எடை நமது எலும்புகள், தசைகள் மற்றும் கொழுப்பு ஆகியவற்றால் ஆனது.
கார்போஹைட்ரேட்டுகள் அல்லது புரதங்கள் ஒருபுறம் இருக்க, தண்ணீர் குடிக்காமலோ, உப்பு சாப்பிடாமலோ, இவ்வளவு எடையை ஒரே இரவில் குறைக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது. வினேஷ் போன்ற 29 வயது பெண்ணுக்கு இந்த எடையைக் குறைப்பது இரட்டிப்பு கடினம். குறிப்பாக ஒரே இரவில்.
நாம் சுவாசிக்கும்போதே தண்ணீர் மற்றும் உப்புகளை இழக்கிறோம். எதுவும் செய்யாமல் இருக்கும்போதே தண்ணீரை இழக்கும் சூழலில், எடையை குறைக்க சுறுசுறுப்பாக வேலை செய்வது, போதுமான தண்ணீரை குடிக்காமல் இருப்பது ஆபத்தானது. உடலில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
விளையாட்டு வீரராக இருந்தாலும் யாராக இருந்தாலும் இதைச் செய்ய மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்படுவதில்லை. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு டெசிலிட்டருக்கு 70 மில்லிகிராம்களுக்கு கீழ் செல்வதால் அதிகப்படியான நீர் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை இழப்பது உடலை ரத்தச் சர்க்கரைக் குறைபாட்டுக்கு தள்ளும்.
நமது மூளை குளுக்கோஸ் இல்லாமல் 2-3 நிமிடங்களுக்கு மேல் இயங்காது. அந்த 2-3 நிமிடங்கள் கூட கடுமையான, நிரந்தர மூளை பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், அதையும் தாண்டி சென்றால், நிரந்தர மூளை மரணம் ஏற்படலாம். அதாவது, கோமாவுக்கு சென்றுவிடுவார்கள்.
இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கடுமையான ரத்தச் சர்க்கரைக் குறைபாடு ஏற்பட்டு வலிப்பு ஏற்படலாம். சுயநினைவின்மை மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்" என்றார்.