(Source: ECI/ABP News/ABP Majha)
Vinesh Phogat Retirement: காலையிலே ஷாக்! மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் திடீர் ஓய்வு - நாடே அதிர்ச்சி
ஒலிம்பிக்கில் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர் பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். ஆனால், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி இறுதிப்போட்டிக்கு முன்பு அவரை தகுதிநீக்கம் செய்வதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதனால், அவர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில், இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு சோகம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். தன்னிடம் போராட சக்தி இல்லை என்று அவர் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வினேஷ் போகத் அதிரடி ஓய்வு:
நேற்று இறுதிப்போட்டிக்கு முன்பாக எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 29 வயதான வினேஷ் போகத் தனது ஓய்வு குறித்து கூறியிருப்பதாவது, “ எனக்கு எதிராக மல்யுத்தம் வென்றது. நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகளும், எனது தைரியமும் சிதறடிக்கப்பட்டது. குட்பை மல்யுத்தம் 2001-2024. உங்கள் அனைவருக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். எ்ன்னிடம் போராட வலிமை இல்லை. மன்னிக்கவும்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
माँ कुश्ती मेरे से जीत गई मैं हार गई माफ़ करना आपका सपना मेरी हिम्मत सब टूट चुके इससे ज़्यादा ताक़त नहीं रही अब।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 7, 2024
अलविदा कुश्ती 2001-2024 🙏
आप सबकी हमेशा ऋणी रहूँगी माफी 🙏🙏
முன்னாள் பா.ஜ.க. எம்.பி. பிரஜ்பூஷனுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பல்வேறு மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் கடந்தாண்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி நடப்பு ஒலிம்பிக் தொடரில் அவர் பங்கேற்றார்.
ஒலிம்பிக்கில் ஏமாற்றம்:
50 கிலோ எடைப்பிரிவில் இந்த முறை களமிறங்கினார். களமிறங்கியது முதல் சிறப்பாக ஆடி வந்த வினேஷ் போகத் தனது போட்டியாளர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடினார். சவால் மிகுந்த ஜப்பான் வீராங்கனை, உக்ரைன் வீராங்கனை மற்றும் கியூபா வீராங்கனை ஆகியோரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நேற்று இறுதிப்போட்டி நடைபெற இருந்த நிலையில் கண்டிப்பாக தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், பேரிடி ஒன்றை ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு தந்தது. 50 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்த காரணத்தால் அவர் போட்டியிட தகுதியில்லை என்று அவரை தகுதிநீக்கம்.
எடையை குறைப்பதற்காக இரவெல்லாம் கண்விழித்து கடுமையாக பயிற்சி செய்து 2 கிலோ வரை எடையை குறைத்தார் வினேஷ் போகத். ஆனால், அவரது எடை 100 கிராம் அதிகமாக இருந்ததாக கூறி அவரை போட்டியிட ஒலிம்பிக் கமிட்டி அனுமதிக்கவில்லை. இது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.