Tokyo Olympics | டோக்கியோ பாராலிம்பிக் : நடப்பு பாராலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி பவினா அரையிறுதிக்கு தகுதி !
டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவானி பட்டேல் காலிறுதிச் சுற்றில் செர்பியா வீராங்கனையை எதிர்த்து விளையாடினார்.
டோக்கியோ பாரலிம்பிக் தொடரின் மூன்றாவது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் பவினாபென் விளையாடினார். காலை நடைபெற்ற போட்டியில் பிரேசில் வீராங்கனை ஒலிவிரா ஜாய்ஸை எதிர்த்து அவர் போட்டியிட்டார். இந்த போட்டியில் 3-0 என்ற கேம் கணக்கில் பவினாபென் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் காலிறுதிப் போட்டியில் அவர் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையான செர்பியா நாட்டின் பெரிக் ரென்கோவிக்கை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் கேமை 11-5 என்ற கணக்கில் பவினா பட்டேல் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமையும் 11-6 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதனால் 2-0 என முன்னிலை பெற்றார்.
ஆகவே மூன்றாவது கேமை வென்றால் போட்டியை வெற்றி பெறலாம் என்ற வலுவான நிலையில் இருந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது கேமில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த பவினா பட்டேல் 11-7 என்ற கணக்கில் வென்றார். இதனால் 11-5,11-6,11-7 என்ற கணக்கில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த செர்பிய வீராங்கனையை தோற்கடித்தார். அத்துடன் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் கிளாஸ் 4 பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் சாம்பியனான பெரிக் ரென்கோவிக்கை வீழ்த்தி பெரும் சாதனையை படைத்துள்ளார்.
#Tokyo2020 #Paralympics #ParaTableTennis
— Sports For All (@sfanow) August 27, 2021
RIO PARALYMPICS GOLD MEDAL WINNER AND WORLD #2 KNOCKED OUT BY @BhavinaPatel6!
Straight game win for #BhavinaPatel who has now earned a spot in the final 4! 11-7, 3rd game! #SheIsGold
Final Score: 🇮🇳3-0🇷🇸#MoreAlike #AbJeetegaIndia
முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சோனல் பட்டேல் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 3 பிரிவில் பங்கேற்று இருந்தார்.முதல் குரூப் போட்டியில் சோனல் பட்டேல் 11-9, 3-11, 17-15, 7-11, 4-11 என்ற கணக்கில் சீனாவின் கியூ லீ யிடம் தோல்வி அடைந்தார்.இரண்டாவது குரூப் போட்டியில் சோனல் பட்டேல் தென்கொரியாவின் மீ குயூ லீயை எதிர்த்து விளையாடினார். அதில் 12-10,5-11,3-11,8-11 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இரண்டு குரூப் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் அவர் நாக் அவுட் சுற்று போட்டிகளுக்கு தகுதிபெறும் வாய்ப்பை அவர் இழந்தார்.