Tokyo Olympics: ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதியில் சதீஷ் குமார் போராடி தோல்வி..!
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் சூப்பர் ஹேவி வெயிட் பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் காலிறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரரிடம் போராடி தோல்வி அடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 91+ கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் பங்கேற்றார். அவர் இரண்டாவது சுற்றில் ஜமைக்கா வீரர் ரிகார்டோ ப்ரோவூனை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் சதீஷ் குமார் வென்றார். அத்துடன் அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். இந்நிலையில் காலிறுதிச் சுற்றில் இன்று அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜலோலோவ் என்பவரை எதிர்த்து விளையாடினார்.
இந்தப் போட்டியில் முதல் ரவுண்டில் சதீஷ் குமார் சற்று சிறப்பாக முயற்சி செய்தார். எனினும் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜலோலோவ் முதல் ரவுண்டை வென்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ரவுண்டிலும் உஸ்பெகிஸ்தான் வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதையும் வென்றார். மூன்றாவது ரவுண்டில் நாக் அவுட் செய்தால் மட்டுமே சதீஷ் குமார் வெற்றி பெற வேண்டிய சூழல் உருவானது. எனினும் அவரால் உஸ்பெகிஸ்தான் வீரரை நாக் அவுட் செய்ய முடியவில்லை. இறுதியில் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தார். அத்துடன் அரையிறுதிக்கு சென்று பதக்கத்தை உறுதி செய்யும் வாய்ப்பையும் அவர் இழந்தார்.
#Boxing:
— India_AllSports (@India_AllSports) August 1, 2021
Satish Kumar goes down to reigning World Champion Bakhodir Jalolov by unanimous decision (0:5) in QF.
A win here would have ensured a medal for India. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/0x1Y2EhP2R
முன்னதாக நேற்று மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிச் சுற்றில் பங்கேற்றார். அவர் 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சீன வீராங்கனையை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனையை பூஜா ராணியை எளிதாக 5-0 என்ற கணக்கில் வென்று அசத்தினார். காலிறுதிச் சுற்றில் வெற்றி பெற்று இருந்தால் பூஜா ஒரு பதக்கத்தை உறுதி செய்திருப்பார் என்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும் அவர் தோல்வி அடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் காலிறுதிச் சுற்றில் தைபேயின் நியன் செனை எதிர்த்து விளையாடினார்.இதில் 4-1 என்ற கணக்கில் லோவ்லினா வெற்றி பெற்றார். அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறினால் வெண்கலப்பதக்கம் உறுதியாகிவிடும். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் குத்துச் சண்டையில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை லோவ்லினா உறுதி செய்து அசத்தினார்.
மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் இரண்டாவது சுற்றில் கொலம்பியா வீராங்கனை வெலன்சியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். அதேபோல் சிம்ரன்ஜீத் கவுர் (60 கிலோ) பிரிவில் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். மேலும் ஆடவர் பிரிவில் மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ)ஆகிய மூவரும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். மற்றொரு இந்திய வீரரான அமித் பங்கால் (52 கிலோ) இரண்டாவது சுற்றில் நேற்று தோல்வி அடைந்து வெளியேறினார்.
மேலும் படிக்க: இனி வெண்கலம் தான் டார்கெட்.. அரையிறுதியில் பிவி சிந்து தோல்வி!