Tokyo olympics: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் தனி நபர் வில்வித்தை : இரண்டாவது சுற்றில் தருண்தீப் ராய் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தனி நபர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தருண்தீப் ராய் தோல்வி அடைந்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் தனிநபர் பிரிவு வில்வித்தை போட்டிகள் அதில் இன்று தருண்தீப் ராய் முதல் சுற்றில் உக்ரைன் நாட்டின் ஹன்பின் ஓலெஸ்கியை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியை 6-4 என்ற கணக்கில் தருண்தீப் ராய் வென்றார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் இஸ்ரேல் நாட்டின் இடேவை எதிர்த்து தருண்தீப் ராய் விளையாடினார்.
அதில், முதல் செட்டை இடே 28-24என வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டை 28-27 என்ற கணக்கில் தருண்தீப் ராய் வென்றார். அதன்பின்னர் 3ஆவது செட்டில் இருவரும் 27-27 என சமமாக இருந்தனர். நான்காவது செட்டை தருண்தீப் ராய் வென்றார். அதனால் 5-3 என அவர் முன்னிலை பெற்றார். அடுத்து நடைபெற்ற ஐந்தாவது செட்டை இஸ்ரேல் வீரர் இடே வென்றார். இதனால் இருவரும் தலா 5 செட் புள்ளிகள் பெற்று 5-5 என்ற கணக்கில் சமமாக இருந்தனர். மொத்தம் 5 செட்கள் முடிவில் இருவரும் சமநிலையில் இருந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் ஆஃப் முறை நடத்தப்பட்டது.
ஷூட் ஆஃப் முறையில் இரு வீரர்களுக்கும் ஒரு முறை வில்வித்தை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி தருண்தீப் ராய் 9 புள்ளிகள் பெற்றார். இஸ்ரேலின் இடே வெற்றி பெற வேண்டும் என்றால் 10 புள்ளிகள் எடுக்க வேண்டிய நிலை உருவானது. அதில் அவர் சிறப்பாக வில்வித்தை செய்து 10 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார். இஸ்ரேலின் இடே 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் தருண்தீப் ராய் தனிநபர் பிரிவில் தோல்வி அடைந்து வெளியேறினார். தருண்தீப் ராய்க்கு இது 3ஆவது ஒலிம்பிக் போட்டியாகும். இதற்கு முன்பாக அவர் ஏதன்ஸ், லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வெல்ல முடியவில்லை என்ற சோகம் அவரை தொடர்ந்துள்ளது.
UPDATE: 🏹 Tarundeep Rai is OUT after a close 1/16 round match, loses in shoot-off. ❌#Archery #IndiaAtTokyo2020 https://t.co/lRfJnOVVsi pic.twitter.com/ZJZh8EIhTF
— India 🇮🇳 at #Tokyo2020 (@IndiansportFeed) July 28, 2021
இந்தியா சார்பில் ஆடவர் தனிநபர் பிரிவு போட்டியில் இன்று பிரவீன் ஜாதவ் ரெஸ்ட் ஆஃப் ஒலிம்பிக் அணியைச் சேர்ந்த கால்சனை எதிர்கொள்ள உள்ளார். இந்தப் போட்டி மதியம் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. அதேபோல் மகளிர் தனிநபர் பிரிவு போட்டியில் தீபிகா குமாரி முதல் சுற்றில் பூடான் நாட்டைச் சேர்ந்த கர்மாவை எதிர் கொள்ள உள்ளார். இந்தப் போட்டி மதியம் 2.15 மணிக்கு நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி : நடப்பு சாம்பியன் பிரிட்டனிடம் இந்திய அணி தோல்வி..!