Tokyo Olympics: ஆடவர் தனி நபர் வில்வித்தை : முதல் சுற்றில் பிரவீன் ஜாதவ் வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தை தனிநபர் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் வெற்றி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளில் தனி நபர் ரிகர்வ் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் தருண்தீப் ராய் முதல் சுற்றில் உக்ரைன் வீரரை வென்றார். இரண்டாவது சுற்றில் அவர் இஸ்ரேல் வீரரிடம் ஷூட் ஆஃப் முறையில் தோல்வி அடைந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆடவர் தனி நபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் ரஷ்ய வீரர் கால்சனை எதிர்த்து முதல் சுற்றில் விளையாடினார்.
அதில் முதல் செட்டில் பிரவீன் ஜாதவ் இரண்டு முறை 10 புள்ளிகள் பெற்றார். இறுதியில் முதல் செட்டை 29-27 என்ற கணக்கில் பிரவீன் ஜாதவ் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் ரஷ்ய வீரர் இரண்டு முறை 10 புள்ளிகள் எடுத்தார். எனினும் இறுதியில் அவர் 7 புள்ளிகள் எடுத்தார். இதனால் பிரவீன் ஜாதவ் கடைசியில் ஒரு 10 புள்ளி பெற்று அந்த செட்டையும் வென்றார். இதனால் 4-0 என்ற கணக்கில் பிரவீன் ஜாதவ் முன்னிலை பெற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் பிரவீன் ஜாதவ் இரண்டு முறை 9 புள்ளிகள் எடுத்தார். இறுதியில் 6-0 என்ற கணக்கில் பிரவீன் ஜாதவ் வென்றார். இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார். அடுத்து சுற்று போட்டியில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான அமெரிக்காவின் எலிசன் பார்டியை இன்று மதியம் 1.30 மணிக்கு பிரவீன் ஜாதவ் எதிர்கொள்ள உள்ளார்.
News Flash: WOW!
— India_AllSports (@India_AllSports) July 28, 2021
Archery: Pravin Jadhav knocks OUT World No. 2 Galsan Bazarzhapov 6-0 in 1st round of Men's Individual event.
Next he will be in action at 1322 hrs IST. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/QZTMEOlH7Q
முன்னதாக கலப்பு பிரிவு வில்வித்தையில் இந்தியா சார்பில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் காலிறுதிச் சுற்றில் பலம் வாய்ந்த தென்கொரிய அணிக்கு எதிராக இந்திய இணை 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தனர். அதேபோல் ஆடவர் குழு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தருண்தீப் ராய், அடானு தாஸ், பிரவீன் ஜாதவ் ஆகியோரும் காலிறுதிச் சுற்றில் தென்கொரியா அணியிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினர். இன்று நடைபெறும் மகளிர் தனிநபர் பிரிவு போட்டியில் தீபிகா குமாரி முதல் சுற்றில் பூடான் நாட்டைச் சேர்ந்த கர்மாவை எதிர் கொள்ள உள்ளார். இந்தப் போட்டி மதியம் 2.15 மணிக்கு நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி !