Tokyo olympics: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் : டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் சுமித் நகல் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நகல் தோல்வி அடைந்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் நேற்று ஆடவர் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியாவின் சுமித் நகல் முதல் சுற்று போட்டியில், உஸ்பெக்கிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் சுமித் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான டெனியல் மெத்வதேவை எதிர்த்து சுமித் நகல் விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே மெத்வதேவ் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 30 நிமிடங்களில் 6-2 என்ற வென்றார். அதன்பின்னர் இரண்டாவது செட்டை 36 நிமிடங்களில் 6-1 என எளிதாக வென்றார். இறுதியில் மெத்வதேவ் 6-2,6-1 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நகலை வீழ்த்தினார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் டென்னிஸ் பயணம் முடிவிற்கு வந்துள்ளது.
ஏனென்றால் நேற்று மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் அன்கிதா ரெய்னா ஜோடி பங்கேற்றது. இவர்கள் இருவரும் உக்ரைன் நாட்டின் கிச்னோக் சகோதரிகளை எதிர்கொண்டனர். அந்தப் போட்டியில் சானியா-அன்கிதா ஜோடி 6-0,6-7,8-10 என்ற கணக்கில் உக்ரைன் அணியிடம் தோல்வி அடைந்தது. இதன்மூலம் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவின் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸில் ஏமாற்றம் அளித்தார்.
#Tennis
— India_AllSports (@India_AllSports) July 26, 2021
Sumit Nagal goes down to World no. 2 Daniil Medvedev 2-6, 1-6 in 2nd round.
To be honest, it wasn't really as lopsided as the scoreline might suggest. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/Wp4adoavHd
இதற்கு முன்பாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சுனிதா ராவ் உடன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்று முதல் சுற்றுடன் வெளியேறினார். 2012 லண்டன் ஒலிம்பிக் ருஷ்மி சக்ரவர்த்தியுடன் இணைந்து சானியா மிர்சா மீண்டும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் சானியா மிர்சா-பிரார்தனா ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்தச் சூழலில் இம்முறை சானியா-அன்கிதா ஜோடி மகளிர் இரட்டையர் பிரிவில் இம்முறையும் சானியா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய சார்பில் மகளிர் இரட்டையர் பிரிவிற்கு சானியா-அன்கிதா ஜோடியும், ஒற்றையர் பிரிவில் சுமித் நகல் மட்டுமே தகுதி பெற்று இருந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது தோல்வி அடைந்துவிட்டதால் டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவின் பயணம் முடிவிற்கு வந்துள்ளது. இம்முறை கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் : ஆடவர் இரட்டையர் பிரிவு குரூப் போட்டி சத்விக்-சிராக் தோல்வி !