Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் : ஆடவர் இரட்டையர் பிரிவு குரூப் போட்டி சத்விக்-சிராக் தோல்வி !
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் குரூப் போட்டியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் குரூப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரர் எதிர்த்து விளையாடினார். அதில் 12-21,14-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அதன்பின்னர் ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி ஆகியோர் குரூப் போட்டியில் பங்கேற்றனர். அவர்கள் அந்தப் போட்டியில் சீன தைப்பேவைச் சேர்ந்த வீரர்களை எதிர்த்து விளையாடினர். இந்த போட்டியில், 21-16, 16-21, 27-25 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் இன்று ஆடவர் இரட்டையர் குரூப் போட்டியில் சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி ஆகியோர் இரண்டாவது குரூப் போட்டியில் உலகின் நம்பர் இரட்டையர் இணையான இந்தோனேஷியாவின் கேவின் சஞ்சையா மற்றும் மார்கஸ் ஜோடியை எதிர்த்து களமிறங்கியது. இதில் தொடக்கம் முதலே உலகின் நம்பர் ஒன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் கேமை 21-13 என்ற கணக்கில் 17 நிமிடங்களில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமிலும் கேவின் சஞ்சையா- மார்கஸ் ஜோடி அதிரடியை வெளிப்படுத்தியது. வெறும் 14 நிமிடங்களில் இந்த கேமை 21-12 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் 21-13,21-12 என்ற நேர் செட் கணக்கில் உலகின் நம்பர் ஒன் இரட்டையர் இணை இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் செட்டியை தோற்கடித்தனர்.
#Badminton :
— India_AllSports (@India_AllSports) July 26, 2021
Satwiksairaj Rankireddy/ Chirag Shetty go down to World No. 1 "Minions" 13-21, 12-21 in their 2nd Group match.
Still they are in contention for a place in QF.
Next they will take on British pair. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/JnD9NDubzJ
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் குரூப் பிரிவில் முதல் போட்டியில் வெற்றியும் இரண்டாவது போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளனர். இந்தச் சூழலில் நாளை பிரிட்டன் அணிக்கு எதிராக நடைபெறும் மூன்றாவது குரூப் போட்டியில் வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறுவார்கள். இதனால் நாளையை போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நாளையை போட்டியில் இந்திய இணை வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவில் குரூப் போட்டியில் நேற்று பி.வி.சிந்து இஸ்ரேல் வீராங்கனையை எதிர்கொண்டார். அதில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-7,21-10 என்ற கணக்கில் 28 நிமிடங்களில் வென்று அசத்தினார். அடுத்த போட்டியில் பி.வி.சிந்து ஹாங்காங் வீராங்கனை செங்கை எதிர்த்து விளையாட உள்ளார்.
மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வில்வித்தை : ஆடவர் குழுப் போட்டி காலிறுதியில் இந்தியா தோல்வி..!