Tokyo Olympics: ஒலிம்பிக் மகளிர் தனிநபர் பிரிவு வில்வித்தை : தென்கொரிய வீராங்கனையிடம் தீபிகா குமாரி தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளில் தனி நபர் ரிகர்வ் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி முதல் சுற்றில் பூட்டான் நாட்டின் கர்மாவை 6-0 என வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் தீபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனிஃபரை எதிர்த்து விளையாடினார். இதனால் 6-4 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் மூன்றாவது சுற்றில் தீபிகா குமாரி ரஷ்ய வீராங்கனை பெரோவாவை இன்று ஷூட் ஆஃப் முறையில் 6-5 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் ஒலிம்பிக் வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என சாதனை படைத்தார்.
இந்நிலையில் காலிறுதியில் தீபிகா குமாரி தென்கொரியாவின் ஆன் சன்னை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் செட்டில் சிறப்பாக வில்வித்தை செய்த தென் கொரிய வீராங்கனை 30 புள்ளிகள் எடுத்தார். முதல் செட்டை 30-27 என்ற கணக்கில் தென் கொரிய வீராங்கனை சென் வென்று 2-0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டையும் 26-24 என்ற கணக்கில் சென் வென்று 4-0 என முன்னிலை பெற்றார். இதனால் மூன்றாவது செட்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தீபிகா குமாரி தள்ளப்பட்டார். மூன்றாவது செட்டில் 26-24 என்ற கணக்கில் சென் வென்றார். அத்துடன் இந்தப் போட்டியை 6-0 என்ற கணக்கில் வென்றார். இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
News Flash: #Archery : Deepika Kumari goes down in QF to top seed An San of South Korea 0-6. #Tokyo2020withIndia_AllSports #Tokyo2020 pic.twitter.com/8iTFAKMyhb
— India_AllSports (@India_AllSports) July 30, 2021
முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவு வில்வித்தையில் இந்தியாவின் அடானு தாஸ் பங்கேற்றார். அதில் முதல் சுற்றில் சீன தைபே அணியின் செங்கை எதிர்த்து விளையாடினார். அதில் 6-4 என்ற கணக்கில் அடானு தாஸ் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தென்கொரிய வீரர் ஜின்ஹெக்கை எதிர்த்து விளையாடினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் அடானு தாஸ் ஷூட் ஆஃப் முறையில் ஜின்ஹெக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிப் பெற்று அசத்தினார். நாளை நடைபெற உள்ள மூன்றாவது சுற்றில் அவர் ஜப்பான் வீரரை எதிர்த்து விளையாட உள்ளார்.
ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய் மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகிய இருவரும் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர். அதேபோல் ஆடவர் குழுப் போட்டியில் இந்திய அணி காலிறுதியில் தென்கொரியா அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. கலப்பு பிரிவிலும் தீபிகா குமாரி-பிரவீன் ஜாதவ் இணை காலிறுதியில் தென்கொரியா அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மகளிர் ஹாக்கி : அயர்லாந்தை வீழ்த்தி 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த முதல் வெற்றி !