Paris 2024 Olympics: ”கோல் அடிச்சிருவியா நீ” - இந்திய ஹாக்கி அணியின் சுவர், பதக்க குவியலுடன் ஓய்வு பெற்ற ஸ்ரீஜேஷ்
Paris 2024 Olympics PR Sreejesh: இந்திய ஆடவர் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ஸ்ரீஜேஷ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
Paris 2024 Olympics PR Sreejesh: இந்திய ஆடவர் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ஸ்ரீஜேஷ், சர்வதேச போட்டிகளில் படைத்த சாதனைகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
விடைபெற்றார் சாதனை நாயகன்:
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்ற நிலையில், கோல் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான ஸ்ரீஜேஷ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 36 வயதான அவர் இந்த ஒலிம்பிக்கில் இந்தியா விளையாடும் கடைசி போட்டியே தனக்கான கடைசி போட்டி என ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, ஸ்பெயினை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்ற உற்சாகத்திலேயே, ஸ்ரீஜேஷ் ஓய்வை அறிவித்துள்ளார். பதக்கம் வென்றபோது மனமகிழ்ந்து மைதானத்திலேயே படுத்து அழுத ஸ்ரீஜேஷை சக வீரர்கள், கட்டி அணைத்து ஊக்கப்படுத்தினர். மேலும், அவருக்கு காட் ஆஃப் ஹானர் மரியாதையும் அளித்து வழியனுப்பி வைத்தனர். இதன் மூலம், ஹாக்கியில் 20 ஆண்டுகள் 336 நாட்களுக்கு தொடர்ந்த ஸ்ரீஜேஷின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
”தி வால்” ஸ்ரீஜேஷ்
இந்திய கிரிக்கெட் அணியில் தடுப்பு ஆட்டத்தின் மூலம், டிராவிட் ”தி வால்” என அறியப்படார். அதே பாணியில், எதிரணிகளின் கோல் அடிக்கும் முயற்சியை தவிடுபொடியாக்குவதில் கைதேர்ந்தவரான ஸ்ரீஜேஷ், இந்திய ஹாக்கி அணியின் ”தி வால்” ஆக போற்றப்படுகிறார். அதற்கு உதாரணம் தான், நடப்பு ஒலிம்பிக்ஸில் இங்கிலாந்து அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில், ஸ்ரீஜேஷ் தடுத்த கோல் மூலம் தான் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
வைரலாகும் வீடியோ:
ஸ்ரீஜேஷ் தனது கடைசி போட்டியில் விளையாடியதை தொடர்ந்து, அணி வீரர்களுடன் தனது அறையில் ”சக்தே இந்தியா” என்ற பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். அதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
No Indian will pass without liking this post!
— ABHINAV MISHRA 𝕏 (@xAbhinavMishra) August 8, 2024
Chak De India 🇮🇳 Back to Back #Bronze medal!!#Sreejesh #Harmanpreet #Hockey #HockeyIndia #IndiaVsSpain #IndiaAtParis24 #IndiaAtOlympics #INDvsESP #NeerajChopra #GOLD pic.twitter.com/WkPt4jaCDM
ஸ்ரீஜேஷின் ஹாக்கி பயணம்:
கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ் கடந்த, 2006 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனியர் அணிக்காக அறிமுகமானார். பின்பு, 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியில் நிரந்தர வீரராக இடம்பிடித்துள்ளார். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க டோக்கியோ ஒலிம்பிக் பிரச்சாரத்திலும் இந்தியா பதக்கம் வென்றதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
பாகுபாலியாக மாறி இந்திய ஹாக்கி அணியை தூக்கி சுமந்த ஸ்ரீஜேஷ்.. கேரள சேட்டனின் கதை!
ஸ்ரீஜேஷ் வென்ற பதக்கங்கள்:
- கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய அணி வெண்கல பதக்கம் வெல்வதில் ஸ்ரீஜேஷ் முக்கிய பங்கு வகித்துள்ளார்
- ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றார்
- காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி இரண்டு முறை வெள்ளிப் பதக்கம் வென்றபோதும் ஸ்ரீஜேஷ் அபார திறனை வெளிப்படுத்தினார்
- ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், ஸ்ரீஜேஷ் இடம்பெற்றிருந்த இந்திய அணி, 4 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது
- ஆசிய கோப்பையில் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்
- சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டு முறை இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றபோது ஸ்ரீஜேஷ் அணியில் இடம்பெற்று இருந்தார்